லைட்டர் பயன்படுத்தி கொள்ளை: சிறுவன் கைது

லைட்டர் பயன்படுத்தி கொள்ளை: சிறுவன் கைது

2 mins read
7aebe5a6-7dd0-4e04-a16d-28316a4a8dce
துப்பாக்கியைப் போல் இருக்கும் தீ மூட்டி (லைட்டர்) சாதனத்தை பயன்படுத்தி முதியவரிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது (படம்: சிங்கப்பூர்க் காவல் துறை) -

14 வயது இளையரும் உடந்தையும் காத்தோங் சிகை அலங்காரக் கடையில் 'லைட்டரை' வைத்து முதியவரை கொள்ளையடித்தனர்.

துப்பாக்கியைப் போல் இருக்கும் தீ மூட்டி (லைட்டர்) சாதனத்தை பயன்படுத்தி முதியவர் ஒருவர் கொள்ளையடிக்கப்பட்டார். இதன் தொடர்பில் 14 வயது சிறுவனும் ஆடவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காத்தோங் கடைத்தொகுதியில் உள்ள முடித்திருத்தும் கடைக்குள் நுழைந்து சந்தேக நபர்கள் முதியவரிடமிருந்து $900 கொள்ளையடித்தார்கள்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை அன்று (அக்டோபர் 14) நடந்தது. குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் சந்தேக நபர்கள் பிடிப்பட்டனர். திங்கட்கிழமை அன்று (அக்டோபர் 16) அவர்கள்மீது கொள்ளை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

36 வயது மலேசியரான ஹொ ஹேன் செங்மீது கொள்ளை குற்றம் சாட்டப்பட்டது. சிறுவர் மற்றும் இள வயதினர் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்ட 14 வயது சிறுவனின் பெயரை வெளியிட முடியாது.

சம்பவம் நடந்த அன்று இரவு 10 மணி அளவில் உதவி கோரி காவல்துறையினர் காத்தோங் கடைத்தொகுதிக்கு அழைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட 71 வயதான முதியவரை துப்பாக்கியைப் போல் இருக்கும் 'லைட்டரை' வைத்து சந்தேக நபர்கள் மிரட்டி பணத்தை கொள்ளையடித்தனர் என்று தெரியவந்தது. முதியவர் கூச்சலிட்ட பின்னர், பணத்தை பறித்துகொண்டு சந்தேக நபர்கள் கடையைவிட்டு ஓடிவிட்டனர்.

கண்காணிப்புக் கருவிகள், காவல்துறை கேமிராக்கள் ஆகியவற்றின் உதவியுடன் சந்தேக நபர்கள் 24 மணி நேரத்துக்குள் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீட்கப்பட்டது.

சிம்ஸ் பிளேஸில் அக்டோபர் 15 அன்று நடந்த திருட்டுக்கும் கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறப்பட்டது. அந்த சம்பவத்தில் 40 வயது பெண்ணிடமிருந்து இரண்டு கைகடிகாரங்கள், சங்கிலி, பை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன

திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஹொவுக்கு 12 பிரம்படி வரை கொடுக்கப்படலாம்.