சிங்கப்பூரிலிருந்து முக்கிய ஐரோப்பிய நகரங்களுக்கு அதிக விமானங்கள் இயக்கப்படலாம்
ஆசியானுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, சிங்கப்பூருக்கும் முக்கிய ஐரோப்பிய நகரங்களுக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியில் நேற்று நடந்த 28வது ஆசியான் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் ஆசியான் - ஐரோப்பிய ஒன்றியம் விரிவான விமானப் போக்குவரத்து உடன்பாடு கையெழுத்தானது.
ஆசியான் வட்டாரத்தைச் சேர்ந்த பத்து நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளுக்கும் இடையே அதிகமான பயணிகள், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு வழியும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தர இந்த உடன்பாடு உறுதியளிக்கிறது.
இவ்விரு வட்டாரங்களுக்கும் இடையே விமானத் தொடர்பு அதிகமாவதன் மூலம் தொழில், வணிகம், சுற்றுப்பயணம் ஆகிய துறைகளும் மேம்படும் என்றும் இதன்மூலம் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர் என்றும் முன்னதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த உடன்பாட்டின்மூலம், 37 ஆசியான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், இரு வட்டாரங்களுக்கும் இடையே எத்தனை விமான சேவைகளை வேண்டுமானாலும் வழங்க முடியும்.
அத்துடன், ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு நாட்டிலிருந்து, மற்றொரு வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு நாட்டிற்கு வாரந்தோறும் 14 பயணிகள் விமானங்களையும் கணக்கின்றிச் சரக்கு விமானங்களையும் அவை இயக்கலாம்.
விமானப் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து நிர்வாகம், பயனீட்டாளர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சமுதாய விவகாரங்கள் போன்ற துறைகளிலும் ஆசியானும் ஐரோப்பிய ஒன்றியமும் அணுக்கமாக இணைந்து செயலாற்ற இந்த உடன்பாடு வழிவகுக்கும்.
கொவிட்-19 தாக்கத்திலிருந்து விமானத்துறை மீண்டுவரும் வேளையில், இந்த உடன்பாடு விமானத்துறைக்குப் புதிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது என்று சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.
"இந்த உடன்பாட்டிற்காக தொடக்கம் முதல் இறுதிவரை ஆசியானின் முன்னணி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டதற்காக சிங்கப்பூர் பெருமைகொள்கிறது. பாதுகாப்பான, நிலைத்த, மீள்திறன்மிக்க விமானத்துறை எதிர்காலத்தை அமைக்க நாம் கடப்பாடு கொண்டுள்ளதை இந்த முன்னோக்கிய, குறிக்கோளுடன் கூடிய உடன்பாடு காட்டுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கொவிட்-19 பரவல் காரணமாக விதித்திருந்த எல்லைக் கட்டுப்பாடுகளை நாடுகள் தளர்த்தியுள்ளதை அடுத்து, விமானப் போக்குவரத்துத் தேவை அதிகரித்து வருகிறது.
எடுத்துக்காட்டாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய நகரங்களுக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் 92.1 விழுக்காடு இருக்கைகள் நிரம்பின. ஓராண்டிற்குமுன் இவ்விகிதம் 23.2 விழுக்காடாக இருந்தது.
தேவை அதிகமாக இருப்பதால் சிங்கப்பூர்-பாரிஸ் இடையே அதிக விமானங்களை இயக்கவுள்ளதாக கடந்த ஜூலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து பாரிசுக்கு இயக்கும் விமானங்களின் எண்ணிக்கையை ஏழில் இருந்து 12ஆக உயர்த்தவுள்ளது.

