கடந்த ஆகஸ்ட் மாதம், ஆண்டு அடிப்படையில் 11.4% வளர்ச்சி கண்ட எண்ணெய் சாரா பொருள்களின் ஏற்றுமதி, அதனையடுத்த செப்டம்பர் மாதத்தில் வெறும் 3.1% மட்டுமே உயர்வுகண்டது.
முன்னதாக, புளூம்பெர்க் நடத்திய கருத்தாய்வில் எண்ணெய் சாரா ஏற்றுமதி செப்டம்பரில் 6.9% ஏற்றமடையலாம் என்று பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்திருந்தனர்.
மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி பெரிதும் சரிவு கண்டதே இந்த வளர்ச்சிக் குறைவிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டு ஆகஸ்ட்டில் 4.5% வீழ்ச்சியுற்ற மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி, செப்டம்பரில் அதைக்காட்டிலும் அதிகமாக 10.6% சரிவுகண்டது.
இதன்மூலம், கடந்த 2020 நவம்பரில் இருந்து தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த மின்னணுத் துறையின் வளர்ச்சிப் பயணம் முடிவிற்கு வந்தது.
குறிப்பாக, வட்டு ஊடகப் பிரிவு 42.7% வீழ்ந்தது மின்னணுத் துறையின் சரிவிற்கு வித்திட்டது. கணினி உதிரிப் பாகங்கள் ஏற்றுமதி 22.3 விழுக்காடும் கணினிச்சில்லு ஏற்றுமதி 12 விழுக்காடும் இறக்கம் கண்டன.
கடந்த செப்டம்பரில் மின்னணுப் பொருள்கள் தவிர்த்த எண்ணெய் சாரா ஏற்றுமதியும் மெதுவடைந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் 16.9 விழுக்காடாக இருந்த அதன் வளர்ச்சி, செப்டம்பரில் 7.6 விழுக்காட்டிற்கு இறங்கியது.
மருந்துகள், அளவீட்டுக் கருவிகள், பணமாக்க முடியாத தங்கம் ஆகியவை மின்னணுப் பொருள்கள் தவிர்த்த எண்ணெய் சாரா ஏற்றுமதியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன.
மாதாந்திர அடிப்படையில் பார்க்கும்போது, தொடர்ந்து இரண்டாவது மாதமாக எண்ணெய் சாரா ஏற்றுமதி சரிவடைந்தது. செப்டம்பரில் அது 4%, அதாவது $16.5 பில்லியனாக வீழ்ச்சிகண்டது. முந்திய ஆகஸ்ட் மாதத்தில் அது 3.9% இறக்கம் கண்டிருந்தது.
ஆண்டு அடிப்படையில் பார்க்கையில், கடந்த செப்டம்பரில் ஒட்டுமொத்த வணிகம் 20.7% உயர்ந்து, $116.5 பில்லியனாகப் பதிவானது.
இதனிடையே, வரும் மாதங்களிலும் எண்ணெய் சாரா ஏற்றுமதி சரிவடையலாம் என்று மேபேங்க் பொருளியலாளர்கள் சுவா ஹன் பின்னும் லீ யு யேயும் கணித்துள்ளனர்.

