சிங்கப்பூரில் நீர்நாய்களின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துவிட்டது. இதையடுத்து, அந்த நீர்நாய்களில் சிலவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவது, கருத்தடை செய்வது உள்ளிட்ட வழிகளில் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க தேசிய பூங்காக் கழகம் ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.
கடந்த வாரம் சிலேத்தாரில் உள்ள ஓர் குடியிருப்புப் பேட்டைக்குள் ஆறு நீர்நாய்கள் புகுந்துவிட்டன. பின்னர் அவை பூங்காக் கழக ஊழியர்களால் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.
நீர்நாய் இடமாற்ற நடவடிக்கை இடம்பெற்றது இதுவே முதன்முறை என்று பூங்காக் கழகத்தின் காட்டுயிர் மேலாண்மைக் குழும இயக்குநர் ஏட்ரியன் லூ குறிப்பிட்டார்.
அப்பகுதியில் எஞ்சியுள்ள நீர்நாய்கள் இருக்கும் புதர்ப்பகுதியைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அவை பாதுகாப்பாக மீட்கப்பட்டதும் மனித நடமாட்டம் இல்லாத, உணவுவளம் மிகுதியாக உள்ள பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று டாக்டர் லூ சொன்னார்.
அண்மையில் புக்கிட் தீமாவில் உள்ள ஒரு குடியிருப்பில் 40க்கும் மேற்பட்ட வளர்ப்பு மீன்களை நீர்நாய்கள் தின்றுவிட்டதாக வெளியான தகவலை அடுத்து, தேசிய பூங்காக் கழகத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதனிடையே, குடியிருப்புப் பேட்டைகளுக்குள் நீர்நாய்கள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தேசிய பூங்காக் கழகமும் நீர்நாய்க் கண்காணிப்புக் குழுவும் வீட்டுரிமையாளர்களுடனும் குடியிருப்புப் பேட்டை நிர்வாகிகளுடனும் இணைந்து பணியாற்றி வருவதாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 79 நீர்நாய்கள் இருந்த நிலையில், அவற்றின் எண்ணிக்கை 150ஆக உயர்ந்துவிட்டது என்று கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கிட்டத்தட்ட 17 குடும்பங்களில் ஏறக்குறைய 170 நீர்நாய்கள் இருப்பதாக பூங்காக் கழகம் நேற்று தெரிவித்தது. அவற்றுள், பீஷான், மரினா, ஸூக் நீர்நாய்க் குடும்பங்கள், பீஷான்-அங் மோ கியோ பூங்கா, மரினா நீர்த்தேக்கம், சிங்கப்பூர் ஆறு மற்றும் காலாங் ஆற்றுப் பகுதிகளில் அடிக்கடி தென்படுவதாகக் கூறப்பட்டது.

