சம்பளப் பிரச்சினை: ஊழியர்கள் இணையம் வழியாக முறையிட வசதி
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, இணைய உரையாடல் செயலி (சாட்பாட்) துணையுடன் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படாத சம்பளத்தைக் கணக்கிடவும் அதன் தொடர்பில் கோரிக்கை தாக்கல் செய்யவும் முடியும். கடந்த 2020 பிப்ரவரியில் உருக்கொண்ட பூசல் தீர்வு இணையவாயிலானது மின்னஞ்சல், குறுஞ்செய்தி, காணொளிக் கலந்துரையாடல் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும் என்று பூசல் நிர்வாக முத்தரப்புக் கூட்டணி (டிஏடிஎம்) தெரிவித்துள்ளது. அந்த இணையவாயில், 'ஆஸ்க் டிஏடிஎம்' என்ற உரையாடல் செயலியுடன் ஒருங்கிணைக்கப் படும் என்றும் பல மொழிகளில் பூசல் தீர்வு சேவையை வழங்குவது குறித்து ஆராயப்படுகிறது என்றும் 'டிஏடிஎம்' பொது மேலாளர் கந்தவேல் பெரியசாமி குறிப்பிட்டார்.
வெளிநாட்டவரை மணப்பது குறைந்தது
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரர்கள் வெளிநாட்டினரை மணப்பது பெரிதும் குறைந்துள்ளது. சென்ற ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த திருமணங்களில் 29% குறைந்தது ஒரு சிங்கப்பூரர் இடம்பெற்ற நாடுகடந்த திருமணங்கள். இவ்விகிதம் 2020ஆம் ஆண்டில் 30 விழுக்காடாகவும் 2019ஆம் ஆண்டில் 37 விழுக்காடாகவும் இருந்தது. அதாவது, சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டில் ஏறத்தாழ 8,100 நாடுகடந்த திருமணங்கள் இடம்பெற்ற நிலையில், 2020ல் அத்தகைய 5,800 திருமணங்களும் 2021ல் 6,800 திருமணங்களும் நடந்தன. அண்மையில் வெளியான 'சிங்கப்பூர் மக்கள்தொகை 2022' அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
வழிமாறும் ஒன்பது பேருந்து சேவைகள்
இப்போது பாசிர் ரிஸ் டிரைவ் 1ன் ஒரு பகுதி வழியாக இயக்கப்படும் ஒன்பது பேருந்து சேவைகள், வரும் 30ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக வழிமாற்றி இயக்கப்பட உள்ளன. அதன்படி, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் 21, 39, 53, 81, 109 ஆகிய ஐந்து பேருந்து சேவைகளும் கோ அஹெட் சிங்கப்பூர் நிறுவனத்தின் 12, 12இ, 17, 518 ஆகிய நான்கு சேவைகளும் வழிமாற்றி இயக்கப்படும். பாசிர் ரிஸ் டிரைவில் பாசிர் ரிஸ் ஈஸ்ட் நிலையத்திற்கு அருகில், ஒயிட் சேண்ட்ஸ் தொடக்கப் பள்ளி ஆகிய இரு பேருந்து நிறுத்தங்களுக்குப் பதிலாக, பாசிர் ரிஸ் ஸ்திரீட் 11க்கும் பாசிர் ரிஸ் ஸ்திரீட் 12க்கும் இடையே ஆறு கூடுதல் நிறுத்தங்களில் அப்பேருந்துகள் நின்றுசெல்லும். குறுக்குத் தீவு ரயில்பாதைக் கட்டுமானப் பணிகளுக்காக சாலைகளை மூட ஏதுவாக இம்மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

