உலகளவில் இப்போது எரிபொருள் நெருக்கடி நிலவுகிறது. அது சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிறுவனங்கள் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஓர் அறிகுறியாக இருக்கிறது என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்து இருக்கிறார்.
இந்த மாற்றத்தில் பின்தங்கும் நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
'2022 சிங்கப்பூர் உலக காம் பேக்ட் கட்டமைப்பு உச்ச மாநாடு' நேற்று நடந்தது. அதில் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச் சருமான திரு டியோ உரையாற்றினார்.
ரஷ்யா-உக்ரேன் போரால் உலக எரிபொருள் நெருக்கடி கூடியிருக்கிறது. இதன் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் நிலக்கரி சுரங்கங்களை மறுபடியும் தொடங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று 300க்கும் மேற்பட்ட பிரமுகர்களிடையே உரையாற்றிய திரு டியோ கூறினார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் முதன்முதலாக மாறிக்கொள்ளும் நிறுவனங்கள் மேல் நிலைகளை எட்ட முடியும். இதில் மெதுவாகச் செயல்படுவோர் போட்டியாளர்களிடம் தோல்வி அடைந்துவிடுவார்கள்.
முயற்சி எதுவும் இல்லாமல் போனால் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று திரு டியோ எச்சரித்தார்.
சிங்கப்பூர் 2050வது ஆண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பாகவே அறவே கார்பன் கழிவு இல்லாத நிலையைச் சாதிக்க வேண்டும் என்று உறுதிபூண்டு இருக்கிறது. இப்படி இலக்கு நிர்ணயித்து இருக்கும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
கரிமக் குறைவு செழித்தோங்கும் உலகில் மூன்று முக்கிய துறைகளில் நிறுவனங்கள் செயல்படலாம் என்று திரு டியோ தெரிவித்தார்.
கரிமக் குறைப்பு, கட்டிக்காக்கக்கூடிய விநியோகக் கட்டமைப்பு நிர்வாகம், சுற்றுச்சூழல் புத்தாக்கத்தில் ஆய்வு உருவாக்க முதலீடு ஆகியவை அந்த மூன்று துறைகள் என்று அவர் விளக்கினார்.
புதிய நிறுவனங்கள் புது தொழில்நுட்பங்களை உருவாக்கி, அவற்றைப் பரிசோதித்துப் பார்க்க மிக அருமையான ஓர் ஆய்வுக்கூடமாக சிங்கப்பூர் திகழ்கிறது என்று மூத்த அமைச்சர் கூறினார்.

