திருவாட்டி ஓங் என்ற மாது 2019ல் டிபிஎஸ் வங்கியைச் சேர்ந்த காப்புறுதித் திட்டம் ஒன்றில் சேர்ந்தார். அந்தத் திட்டத்தில் இருந்து முன்னதாகவே அவர் விலகிக்கொண்டார். இதனால் அவருக்கு $100,000க்கும் மேற்பட்ட தொகை இழப்பு ஏற்பட்டது.
இந்தத் தொகையைத் திரும்பப் பெற அந்த 69 வயது குடும்ப மாது முயன்று வருகிறார். ஆனால் அந்த மாது கூறுவதை வங்கி மறுக்கிறது.
காப்புறுதித் திட்டத்தில் இருந்து முன்னதாகவே விலகிக் கொண்டால் பொதுவாகவே இழப்பு அதிகம் ஏற்படும். இது அந்த மாதுக்குத் தெரியும் என்று டிபிஎஸ் வங்கி கூறுகிறது.
காப்புறுதிப் பாதுகாப்புடன் ஆண்டுதோறும் ஒரு தொகையை அந்தத் திட்டம் மூலம் பெறலாம் என்றும் மூன்று ஆண்டுகளுக்குச் சந்தா செலுத்தினால் போதும். பணத்தைத் திருப்பி எடுத்துக் கொள்ளலாம் என்றும் தன்னிடம் கூறப்பட்டதாக அந்த மாது தெரிவிக்கிறார்.
ஆனால், அத்தகைய காப்புறுதித் திட்டத்தில் சேர்பவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சந்தா செலுத்த வேண்டும் என்கிறது வங்கி.
டிபிஎஸ் வங்கிக் கிளைகளில் பெறக்கூடிய 'மேனுலைஃப்' என்ற கனடாவைச் சேர்ந்த காப்புறுதி நிறுவனத்துடன் 'ரெடி பேஅவுட் பிளஸ்' என்ற திட்டத்தில் அந்த மாது சேர்ந்தார். அதற்கு ஆண்டுதோறும் $60,000 சந்தாவாக செலுத்த அவர் இணங்கினார்.
அந்த 15 ஆண்டுகால காப்புறுதித் திட்டம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை வழங்கும்.
என்றாலும் நடுவில் மரணம் அடைந்துவிட்டால் தன்னுடைய வாரிசுகளுக்கு $426,000 கிடைக்கும் என்று தன்னிடம் கூறப்பட்டதாக அந்த மாது கூறுகிறார்.
ஆனால் அப்படி எதுவும் கிடைக்காது என்பது அந்த மாதுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து பணத்தைத் திருப்பி கொடுக்கும்படி தான் வங்கியை கேட்டு இருப்பதாக அந்த மாது குறிப்பிட்டார்.

