துணைப் பிரதமர்: எப்போதும் இரட்டை உத்தி அவசியம்

துணைப் பிரதமர்: எப்போதும் இரட்டை உத்தி அவசியம்

3 mins read
7d9441b8-55ba-4406-87ed-baeacfdf6af7
-

ஆற்றல்மிக்கோரை வரவேற்பது; உள்ளூர் மக்களை உன்னத நிலைக்கு உயர்த்துவது

சிங்கப்பூர் எப்போதுமே இரட்டை உத்தியைத் தொடர வேண்டும் என துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.

உலகின் தலைசிறந்த ஆற்றல்மிக்கோரை வரவேற்பது; அதேவேளையில், தன்னுடைய மக்களைத் தொடர்ந்து உன்னத நிலைக்கு மேம்படுத்துவது ஆகியவை அந்த இரட்டை உத்தி என்றார் அவர்.

சிங்கப்பூர் உலகின் தலைசிறந்த நிறுவனங்களையும் ஆற்றல்மிக்கவர்களையும் தொடர்ந்து ஈர்த்து அதிநவீன அனுகூலங்களைப் பெருக்கி வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், தன்னுடைய மக்களை உன்னத நிலைக்கு மேம்படுத்தி, அவர்கள் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் தொழிலில் வெற்றிபெற ஆன அனைத்தையும் சிங்கப்பூர் செய்ய வேண்டும் என்றும் திரு வோங் கூறினார்.

முன்னேறும் சிங்கப்பூர் உத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக பொருளியலை வளர்ப்பது, அதேவேளையில் பொருளியல் வளர்ச்சியால் ஏற்படக்கூடிய பலன் நியாயமாக எல்லாருக்கும் பகிர்ந்து கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சவால்களை நாடு எப்படி சமாளித்து வெற்றிபெற முடியும் என்பது பற்றி திரு வோங் உரையாற்றினார்.

சிங்கப்பூர் பொருளியல் சமூகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அவர் பேசினார். உலகப் பொருளியல் சூழ்நிலை நிச்சயமில்லாமல் இருப்பதால் சிங்கப்பூர் தனது பொருளியல் உத்திகளைத் தொடர்ந்து புதுப்பித்து வரவேண்டும். அதன் ஒரே வளமான மக்கள் வளத்தை அது மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இதைச் செய்ய அரசாங்கம் தேர்ச்சி, பயிற்சிகளில் மேலும் முதலீடு செய்யும் என்றார் அவர்.

அதேவேளையில், ஊழியர்கள் தொடர்ந்து போட்டித்திறனுடன் ஏற்புடைய நிலையில் திகழ வேண்டுமானால், அவர்கள் காலப்போக்கில் தங்கள் தேர்ச்சிகளை, ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தேர்ச்சி பயிற்சி ஒருபுறம் இருக்க, அரசாங்கம் தொடர்ந்து மனிதவளக் கொள்கைகளையும் விதிமுறைகளையும் மேம்படுத்தி வரும். இதன்மூலம் வேலை அனு மதியில் இங்கு வருவோரின் எண்ணிக்கை நிர்வகிக்கப்படும்.

அதேநேரத்தில், முதலாளிகள் நியாயமான வேலை நியமன நடைமுறைகளை கைக்கொள்கிறார்கள் என்பதும் உறுதிப்படுத்தப்படும்.

பயனுள்ள பயிற்சிகளில் ஊழியர்கள் தங்கள் நேரத்தை முதலீடு செய்வதை சாத்தியமாக்க அரசாங்கம் பாடுபட வேண்டி இருக்கிறது என்று திரு வோங் குறிப்பிட்டார்.

வேலையிழந்த ஊழியர்களுக்கு இன்னும் சிறந்த ஆதரவு வழங்கும் வழிகள் பற்றியும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றாரவர்.

உலகத்துடனான தொடர்புடன் திறந்த நிலையில் இருந்து வருவது சிங்கப்பூருக்கு தேவையானது மட்டுமல்ல; அது சிங்கப்பூர் உயிர்ப்பித்து இருப்பதற்கு அவசியமான ஒன்று என்றார் துணைப் பிரதமர்.

வெளிநாட்டினருக்குக் கதவை மூடிவிட்டால் சிங்கப்பூரர்களுக்கு தானாகவே வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது என்றார் திரு வோங்.

அளவுக்கு அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய கொள்கைகளை அமல்படுத்தினால் பன்னாட்டு நிறுவனங்கள் வேறு இடங்களுக்குப் போய்விடும்.

அவற்றால் ஏற்பட்ட வேலைகளும் இல்லாமல் போய்விடும். பொருளியல் சுருங்கும்; சம்பளம் குறையும்; மோசமான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்; கடைசியில் சிங்கப்பூரர்கள்தான் இதற்கான விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும் என்று துணைப் பிரதமர் விளக்கினார்.

அப்படி செய்வதற்குப் பதிலாக சிங்கப்பூருக்கு புதிய முதலீடுகளைக் கொணர்ந்து அந்த முதலீடுகள் காரணமாக சிங்கப்பூரர்களின் ஆற்றல் பெருகி அவர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகள் ஏற்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு மிகக் கவனமாக நடந்து வருவதாக துணைப் பிரதமர் கூறினார்.