சிங்கப்பூரின் முதலாவது அறிவார்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த பகுதியாக தெங்கா நகரம் உருவாகிறது. அங்கு கட்டப்பட இருக்கும் முதலாவது கூட்டுரிமை (இசி) திட்ட வீடுகளுக்கு 'கோப்பன் கிராண்ட்' என்று பெயர்.
அந்தத் திட்ட வீடுகளை வாங்க 2,300 விண்ணப்பங்கள் குவிந்து இருக்கின்றன. வீடுகளின் விற்பனைக்கூடம் அக்டோபர் 7ஆம் தேதி திறக்கப்பட்டது.
அது முதல் சுமார் 20,700 வருகையாளர்கள் அதைப் பார்வையிட்டு இருக்கிறார்கள்.
அந்தத் திட்டத்தில் வரம்புக்குட்பட்ட வீடுகளே கட்டப்படுகின்றன.
அந்த வீடுகள் அமையும் இடத்திற்கு அருகே மூன்று எம்ஆர்டி நிலையங்கள் உருவாக இருக்கின்றன. ஜூரோங் லேக் மாவட்டம், ஜூரோங் புத்தாக்க மாவட்டம் ஆகிய இரண்டு அக்கம்பக்க மையங்களும் அமைய இருக்கின்றன.
அந்தத் திட்ட வீடுகளை வாங்க பலரும் மிகவும் நாட்டமாக இருப்ப தற்கு இந்த அம்சங்களே காரணம் என்று சிட்டி டெவலப்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.
அந்தத் திட்டத்தில் 639 வீடுகள் கட்டப்படுகின்றன. அவற்றை வாங்குவதற்குத் தகுதிபெற விண்ணப்பிக்கும் காலம் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது.
விற்பனை முன்பதிவுகள் வரும் சனிக்கிழமை தொடங்கும். வீட்டை வாங்க முன்பதிவு செய்வோர், இன்றும் நாளையும் முற்பகல் 10 மணி முதல் இரவு 9 மணி வரை அந்த விற்பனைக்கூடத்தில் தங்களுடைய குலுக்கல் சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும்.
குலுக்கல் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கும். கோப்பன் கிராண்ட் வீடுகள் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனைக்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தக் காலாண்டில் மற்றொரு திட்ட கூட்டுரிமை வீடுகளும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெம்பனிசில் கட்டப்படும் 618 வீடுகளுடன் கூடிய டெனட் திட்ட வீடுகள் அடுத்த மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

