சிங்கப்பூரில் கொரோனா தொற்று கூடுகிறது. இந்தச் சூழலில் பொறுப்புடன் நடந்துகொண்டு தங்களையும் தங்களைச் சுற்றி இருப்போரையும் பாதுகாத்துக்கொள்ளும்படி தேசிய தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.
கல்வி அமைச்சு நேற்று பெற்றோருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியது. தேர்வு இடங்களில் மாணவர்கள் விரும்பினால் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம் என்று அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடக்கும் இடங்களில் தொடர்ந்து பாதுகாப்பான துப்புரவு நடைமுறைகள் அனைத்தும் அமல்படுத்தப்படும்.
மாணவர்களின் நல்வாழ்வும் உடல்நலனும் உறுதிப்படுத்தப்படும் என்று 'பேரன்ட்ஸ் கேட்வே' என்ற செயலி வழியாக அமைச்சு அந்தச் செய்தியில் கூறியுள்ளது.
தேர்வின்போது அல்லது தேர்வுக்கு கொஞ்சம் நேரம் முன்னதாக தங்கள் பிள்ளைக்கு கொவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்தால் அது பற்றி பெற்றோர் தங்கள் பிள்ளையின் பள்ளிக்கூடத்திடம் தெரியப்படுத்த வேண்டும்.
பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்க நிலை, சாதாரண நிலை, மேல் நிலைத் தேர்வுகள் இப்போது நடந்து வருகின்றன.
சில தேர்வுகள் நவம்பர் நடுப்பகுதி வரை நடக்கும். தொடக்கப் பள்ளி மாணவர்களும் இப்போது தேர்வு எழுதி வருகிறார்கள்.
சிங்கப்பூரில் உருமாறிய எக்ஸ்பிபி என்ற ஒமிக்ரான் கிருமி அதிகமாக இப்போது தலைதூக்குகிறது. அடுத்த மாத நடுப்பகுதி வாக்கில் அன்றாடம் சராசரியாக 15,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தாங்கள் முன்னெச்சரிக்கை நடைமுறைகளுடன் நடந்துகொள்வதாக சில பெற்றோர்கள் தெரிவித்தனர்.
தேசிய தேர்வுகளுக்கான சிங்கப்பூர் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் கழகத்தின் பாதுகாப்பு நிபந்தனைகளின்கீழ், மாணவர்கள் தங்களுக்கு உடல்நிலைச் சரியில்லை என்றால் இருமல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். தேர்வுக்கு வரக்கூடாது.
தேர்வுக்கு முன்னதாக 72 மணி நேரத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அத்தகைய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
நல்ல காற்றோட்டமான இடங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்பதை ஆசிரியர்கள் முழு விழிப்புநிலையில் இருந்து உறுதிப்படுத்துவார்கள் என்றும் இந்தக் கழகத்தின் இணையத்தளம் கூறுகிறது.
உடல்நிலை சரியில்லாமல் தேர்வு எழுத முடியாமல்போகும் மாணவர்கள் சிறப்புப் பரிசீலனைக்கு விண் ணப்பிக்கலாம்.

