தீபாவளி: வரும் 24ஆம் தேதி இஸ்தானா திறந்திருக்கும்
தீபாவளியை முன்னிட்டு இஸ்தானா இம்மாதம் 24ஆம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும். நடன, இசை நிகழ்ச்சிகளை வருகையாளர்கள் ரசிக்கலாம்.
இஸ்தானா திடலில் பலூன் சிற்பங்கள், மெழுகுவர்த்தி தயாரிப்பு போன்றவற்றில் அவர்கள் பங்கெடுக்கலாம். இஸ்தானா தாவர வளங்களை, பிரதான கட்டடத்தின் குறிப்பிட்ட அறைகளைப் பார்வையிடலாம்.
உணவு வண்டிகளும் இஸ்தானா மற்றும் அதிபர் சவால் நினைவுப்பொருள்கள் விற்பனைக் கூடங்களும் இருக்கும். சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு நுழைவு இலவசம். மற்றவர்களுக்குக் கட்டணம் $2. 'பேநவ்' செயலி வழி யாகத்தான் கட்டணம் செலுத்த வேண்டும்.
மக்கள் கழகத்திற்கு புதிய நிர்வாகி
மக்கள் கழகத்தின் புதிய தலைமை நிர்வாக இயக்குநராக திரு ஜிம்மி டோ யோங் லெங், 50, நவம்பரில் நியமிக்கப்படுகிறார். அவர் ஜனவரி 1ஆம் தேதி முதல் முழு பொறுப்பையும் ஏற்பார். மக்கள் கழகத்தின் இப்போதைய தலைமை நிர்வாக இயக்குநரான லிம் ஹோக் யு அதே நாளன்று பதவியில் இருந்து விலகுவார்.
திரு லிம், ஜனவரி 1ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சீன வர்த்தக தொழில்சபையின் தலைமைச் செயலாளராக பொறுப்பு ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மக்கள் கழகத்தின் துணைத் தலைவரான கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், மக்கள் கழகத்தில் திரு லிம் பல ஆண்டு காலம் தனிச்சிறப்புமிக்க சேவை ஆற்றியுள்ளதாகக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார்.
ஆடம்பர தனியார் வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகம்
சிங்கப்பூரில் ஆடம்பர கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருக்கிறது என்று 'ஹட்டன்ஸ் ஆசியா' நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் புதிய 110 அடுக்குமாடி வீடுகள் $5 மில்லியனுக்கும் அதற்கும் அதிக விலைக்கும் விற்கப்பட்டு இருக்கின்றன.
இந்த எண்ணிக்கை, அதற்கு முந்திய காலாண்டுடன் ஒத்து இருக்கிறது. இத்தகைய வீடுகளை வாங்கியவர்கள் மொத்தம் $1 பில்லியன் செலவிட்டு இருக்கிறார்கள். இது இரண்டாவது காலாண்டைவிட 15.5% அதிகம்.
இத்தகைய ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் மாவட்டம் 10ல் இருக்கும் 'லெஸ் மைசன்ஸ் நஸிம்' வீட்டுத் தொகுதியில் உள்ள 11,227 சதுர அடி பரப்புள்ள உச்சி மாடி வீடுதான் ஆக அதிகமாக $68 மில்லியனுக்குக் கைமாறி இருக்கிறது.
எஸ்ஐஏ, ஸ்கூட் விமானங்களில் 2.1 மில்லியன் பயணிகள்
சுற்றுப் பயணத்துறை வேகமாக மீட்சி கண்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனமும் அதனுடைய மலிவுக் கட்டண ஸ்கூட் நிறுவனமும் செப்டம்பர் மாதம் 2.1 மில்லியன் பயணிகளைச் சுமந்து சென்றிருக்கின்றன. இது ஆகஸ்ட் மாதத்தைவிட 2.5% உயர்வு.
கிழக்கு ஆசியாவைத் தவிர இதர அனைத்து வழித்தடங்களிலுமே தேவை தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. கிழக்கு ஆசியாவின் பல நகர்களில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்து நடப்பில் இருந்து வருகின்றன என்று எஸ்ஐஏ நேற்று தெரிவித்தது.
அனைத்து சந்தைகளிலுமே எஸ்ஐஏவுக்கும் ஸ்கூட்டுக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இவற்றின் விளைவாக சரக்குகளின் நடமாட்டமும் விரிவடைந்து இருக்கிறது.
எஸ்ஐஏ நிறுவனம் செப்டம்பர் மாதம் கிழக்கு ஆசியாவுக்கான சேவைகளைத் தீவிரப்படுத்தியது. செப்டம்பரில் எஸ்ஐஏ 74 நகரங்களுக்கும் ஸ்கூட் 48 நகரங்களுக்கும் சேவையாற்றின. சரக்குக் கட்டமைப்பு 107 நகரங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
புதிய பொறுப்பு ஏற்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் வாரன் ஃபெர்னான்டஸ், 'ஈடல்மென்ஸ்' ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்.
இதை, அந்த உலகளாவிய தொடர்புத் துறை நிறுவனம் தெரிவித்தது. திரு ஃபெர்னான்டஸ் அந்தப் பொறுப்பை அக்டோபர் 25ஆம் தேதி மேற்கொள்வார். இந்த வட்டாரத்தின் 21 அலுவலகங்களையும் 1,300க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் அவர் மேற்பார்வையிடுவார்.
திரு ஃபெர்னான்டஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகக் குழுமத்தின் முதன்மை ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறார் என்றும் அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை சிஎன்ஏ டிஜிட்டல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை ஆசிரியரான ஜேய்மி ஹோ ஏற்கிறார் என்றும் எஸ்பிஎச் ஊடகக் குழுமம் ஒரு வாரத்திற்கு முன் அறிவித்தது.

