குறைந்தது 13,400 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வகைசெய்ய ஐந்து மேம்பட்ட உற்பத்தித் துறைகள், வர்த்தகக் குழுமங்கள் ஆகியவற்றுக்கான தொழில்துறை உருமாற்றத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்டுள்ள அந்த தொழில்துறை உருமாற்றத் திட்டங்களை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று வெளியிட்டார். சிங்கப்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 'இண்டஸ்ட்ரியல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆசிய-பசிபிக் 2022' எனும் இவ்வாண்டின் ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான தொழில்துறை உருமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் திரு ஹெங் திட்டங்களை வெளியிட்டார்.
ஆய்வு மற்றும் மேம்பாடு, பெரிய அளவிலான மின்னிலக்கமயமாதல் நடவடிக்கைகள், மின்சாரப் பொருள்களின் தொடர்பில் சுற்றுச்சூழலுக்கான நீடித்த நிலைத்தன்மை அம்சம், துல்லியப் பொறியியல், எரிசக்தி மற்றும் ரசாயனம், ஆகாயவெளித் துறை, தளவாடத் துறைகள் ஆகியவற்றுக்கு மாற்றம் கண்டுள்ள தொழில்துறை உருமாற்றத் திட்டங்கள் ஆதரவு வழங்கும். ஆண்டுதோறும் சிங்கப்பூரின் உற்பத்தி வெளியீட்டில் இந்தத் துறைகள் சுமார் 80 விழுக்காடு பங்கு வகிப்பதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.
புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தவும் பெரிய அனைத்துலக நிறுவனங்கள், உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டு உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளைப் பெறும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதும் தொழில்துறை உருமாற்றத் திட்டங்களின் இலக்கு.
தொழில்துறை உருமாற்றத் திட்டங்கள் 2016ஆம் ஆண்டு அறிமுகமாயின. 23 தொழில்முறைகளின் மாறுபட்ட மறுசீரமைப்பு முயற்சிகளை ஒன்றிணைப்பது, அரசாங்கம், நிறுவனங்கள், வர்த்தகச் சங்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலான பங்காளித்துவத்தை மேம்படுத்துவது அவற்றின் நோக்கம்.

