தனது ஐந்து வயது மகன்மீது பலமுறை வெந்நீரை ஊற்றிய தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்லின் அருஜுனா என்ற அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
அஸ்லின்னும் அவரின் கணவர் ரிட்ஸுவான் மெகா அப்துல் ரஹ்மானுக்கும் வயது 30. 2016ஆம் ஆண்டில் இருவரும் தோ பாயோவில் இருக்கும் தங்களின் ஓரறை வீட்டில் சிறுவன்மீது நான்கு முறை வெந்நீரை ஊற்றியிருக்கின்றனர்.
அபாயகரமான செயல்களால் மோசமான காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக 2020ஆம் ஆண்டில் இருவருக்கும் ஆளுக்கு 27 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ரிட்ஸுவானுக்கு 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருந்தன.
ரிட்ஸுவானின் தண்டனை கடந்த ஜூலை மாதம் ஆயுள் தண்டனையாக அதிகரிக்கப்பட்டது. பிரம்படிகள் தண்டனை மீட்டுக்கொள்ளப்பட்டது. அஸ்லின் கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.
சிறுவனின் காயங்களால் அவரின் உயிர் போகும் என்பது அஸ்லின்னுக்குத் தெரிந்திருக்காது; அதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கத் தேவையில்லை என்று ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழு நேற்று கூறியது.
எனினும், அஸ்லின்னின் செயல்கள் கொடூரமான மனிதாபிமானமற்றவை என்று சமூகத்தில் பலர் கருதுவர் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15, 22ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இருவரும் தங்களின் மகன்மீது நான்கு முறை வெந்நீரை ஊற்றினர்.
நான்காவது முறை அவ்வாறு செய்தபோது சிறுவன் மயங்கிய சுமார் ஏழு மணிநேரத்திற்குப் பிறகே பெற்றோர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தனது உடலின் சுமார் 75 விழுக்காடு இடங்களில் மோசமான சூட்டுக் காயங்கள் ஏற்பட்ட சிறுவன் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதியன்று மாண்டார்.
உயிர் போகும் வரை ஐந்து வயது சிறுவன் மீது வெந்நீரை ஊற்றிய விவகாரம்

