தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி அங் மோ கியோவில் ஒரு கட்டடத்தின் நுழைவாயிலை நேற்று சில வெளிநாட்டு ஊழியர்கள் மறைத்ததாகச் சொல்லப்படுகிறது. அச்சம்பவம் பதிவானதாகக் கருதப்படும் 18 வினாடிகள் நீடிக்கும் காணொளி 'சிங்கப்பூர் இன்சிடன்ட்ஸ்' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
'ஷங்காய் சோங் கீ' கட்டுமான நிறுவனம், 'கடனைத் திரும்பத் தாருங்கள்' உள்ளிட்டவை சீன மொழியில் எழுதப்பட்டிருந்த தாள்களை ஒன்பது ஊழியர்களில் ஐவர் வைத்திருந்தது காணொளியில் பதிவானது. சிலர் காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருந்த காட்சியும் காணொளியில் இடம்பெற்றது.
'என்சிஎஸ் ஹப்' நிறுவனம் உள்ள 5 அங் மோ கியோ ஸ்திரீட் 62க்கு வருமாறு நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் அழைப்பு வந்ததாகக் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
யாரும் கைதுசெய்யப்படவில்லை. விசாரணை நடைபெறுகிறது.

