திட்டமிட்ட கொலை, போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கி பயன்படுத்துதல் போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை சிங்கப்பூரில் பத்தில் ஏழு பேர் ஆதரிக்கின்றனர்.
கடுமையான குற்றங்களைத் தடுக்க மரண தண்டனை உதவுவதாக சிங்கப்பூரைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளில் இருப்பபவர்களில் பத்தில் எட்டு பேர் கருதுகின்றனர்.
உள்துறை அமைச்சு நடத்திய மூன்று ஆய்வுகளில் இத்தகவல்கள் தெரியவந்தன.
உள்துறை அமைச்சின் ஆய்வு, புள்ளிவிவர பிரிவு நடத்திய ஆய்வில் திட்டமிட்ட கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை 80.5 விழுக்காட்டினர் ஆதரித்தனர். சட்டவிரோதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தும் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை 71.5 விழுக்காட்டினர் ஆதரித்தனர். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போதைப்பொருள் கடத்தும் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படுவது சரியே என்று 60.5 விழுக்காட்டினர் கூறினர்.
கடுமையான குற்றங்களைத் தடுக்க மரண தண்டனை உதவுவதாக ஆய்வில் கலந்துகொண்ட 83 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் கருத்துரைத்தனர்.
ஆய்வில் பங்கெடுத்த 89.2 விழுக்காட்டினர், சிங்கப்பூரின் சட்ட செயலாக்கத்தை நம்புவதாகக் குறிப்பிட்டனர். 91 விழுக்காட்டினர் சிங்கப்பூரின் கடுமையான சட்டங்கள் குற்றங்களை தடுக்க உதவுவதாகக் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூரில் மரண் தண்டனைக்கு வலுவான ஆதரவு இருப்பதாகவும், அது குற்றங்களைத் தடுக்க உதவுவதாகவும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் முன்னதாக மார்ச் மாதம் இடம்பெற்ற உள்துறை அமைச்சுக்கான சப்ளைக் குழு உரையில் கூறினார்.

