ஆஸ்திரேலிய உயர் தொழில்நுட்ப ஆய்வு வளாகத்தை சிங்கப்பூர் பயன்படுத்திக்கொள்வதை, புதிதாக கையெழுத்தான ஐந்தாண்டு ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். 'நானோ' கட்டுருவாக்கம், உயிர்-அறிவியல், வேளாண்மை உட்பட வளர்ச்சி கண்டு வரும் பல்வேறு துறைகளில் அறிவியல் ஆராய்ச்சி முயற்சிகளை முடுக்கிவிடும் நோக்கில் திங்கட்கிழமையன்று ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தப்படி, ஒளியின் வேகத்திற்குக் கிட்டத்தட்ட ஈடாக எலக்ட்ரான்களைத் துரிதப்படுத்தும் உயர் தொழில்நுட்பம் பொருந்திய 'ஆஸ்திரேலிய சிங்க்ரோடான்' வளாகத்தை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சிங்கப்பூரில் உள்ளதைக் காட்டிலும் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அமைந்துள்ள 'சிங்க்ரோடான்' மேலும் அதிநவீனமுடையது. உயிரினங்கள், உயர்தரப் பொருட்கள் ஆகியவற்றின் நுண்ணியக் கட்டமைப்புகளைக் காட்டிடும் ஆற்றலையும் அது கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய சிங்க்ரோடானைப் பயன்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் சிங்கப்பூர் ஆய்வாளர்களின் காத்திருப்பு நேரம் குறையும் என்று சிங்கப்பூர் தேசிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜஸ்பிர் சிங் கூறினார்.
இதன்படி, 2007ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கிய இந்த $220 மி. ஆஸ்திரேலிய டாலர் (S$197 மி.) வளாகத்தைப் பயன்படுத்துவதற்கான தங்களது திட்டங்களைச் சமர்ப்பிக்கும் வெளிநாட்டு விஞ்ஞானிகளுடன் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் போட்டியிடத் தேவையில்லை.
வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் மற்றும் ஆஸ்திரேலிய தொழில், அறிவியல் துறை அமைச்சர் எட் ஹசிக் முன்னிலையில் ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, தொழில்நுட்பப் பிரிவுக்கான துணைத் தலைவர் பேராசிரியர் சென் சுஹான், ஆஸ்திரேலிய சிங்க்ரோடானை இயக்கிவரும் ஆஸ்திரேலிய அணு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் தலைமை நிர்வாகி திரு ஷான் ஜென்கின்சன் இருவரும் கையெழுத்திட்டனர்.

