அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில்கொண்டு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதிவழி பயனடைவோருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மேலும் $5 கூடுதலான கைச்செலவுத் தொகை கிடைக்கும். நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர பாராட்டு விழாவில் இது குறித்து அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 65 வெள்ளியும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 100 வெள்ளியும் உயர்கல்வி மாணவர்களுக்கு 125 வெள்ளியும் மாதந்தோறும் வழங்கப்படும். இதனால் சுமார் 12,000 பேர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கைச்செலவுத் தொகை அதிகரிப்பாலும் ஒருமுறை வழங்கப்படவுள்ள மானியத்தாலும் இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டில் கூடுதலாக $1 மி. வழங்கப்படுகிறது.
பள்ளி வாழ்க்கையில் ஏற்படக்கூடிய செலவுகளைச் சமாளிப்பதற்காக, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் நிதி திரட்டி வழங்கி வருகிறது.
நிதித் திட்டம் 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் 200,000க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் மொத்தம் $90 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் நிதித் திட்டத்திற்கு நீண்டகால ஆதரவாளராக உள்ள திரு முகம்மது ஜலீல், 500,000 வெள்ளி நன்கொடை அளித்தார். 'எம்இஎஸ்' குழுமத் தலைவரான இவர், 2010ஆம் ஆண்டு முதல் இந்நிதித் திட்டத்திற்கு ஏறத்தாழ 5 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளார்.

