சிறையிலிருந்து அக்டோபர் 2020ல் விடுதலையான பின்னர் பலரையும் ஏமாற்றி மொத்தம் $87,700 பணத்தைக் கையாடிய 48 வயது சியேரா பெலுச்சி ஏஜே, 48, என்பவருக்கு மூவாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தான் வாடகைக்குத் தங்கி இருந்த வீவக வீட்டைப் பிறருக்கு வாடகைக்கு விடுவதாகக் கூறி, முன்பணம் வாங்கியிருந்தார் சியேரா. இருப்பினும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக விதிமுறைகளின்படி வாடகைக்கு இருப்பவர், வீட்டைப் பிறருக்கு உள்வாடகைக்கு விட அனுமதி இல்லை.
சியேரா அக்டோபர் 30, 2020 முதல் மார்ச் 19, 2021 வரை சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற தண்டனைக்கால குறைப்பு ஆணையின்கீழ் இருந்தபோது வாடகை தொடர்பான மோசடிக் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்பட்டது. ஆணையை மீறிய குற்றத்துக்காக சியேரா கூடுதலாக 37 நாட்கள் சிறையில் இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்குக் குறைந்த வாடகையில் கிட்டும் வகையில் வழங்கப்படும் வாடகை வீடுகளை, கூடுதல் வருமானம் பெறுவதற்கெனப் பயன்படுத்தக்கூடாது என்று மாவட்ட நீதிபதி மார்வின் பே தண்டனை விதிப்பின்போது நினைவூட்டினார்.
ஆஸ்திரேலிய நிரந்தரவாசி விசா பெறுவதற்கான சேவையையும் தான் வழங்குவதாகக் கூறி ஆடவர் ஒருவரை சியேரா ஏமாற்றி உள்ளார்.

