செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
88c0e342-1ff5-414c-a5e0-d4384c0c5d91
-

$1.4 மில்லியன் இழப்பீடு கோரியவரின் வழக்கு தள்ளுபடி

கிலேக்சோசிமித்கிளைன் (ஜிஎஸ்கே) பயனீட்டாளர் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான திரு கல்லிவலப் பிரவீன் நாயர், $1.4 மில்லியன் இழப்பீடு கோரி தொடுத்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அவர் ஜூன் 2018ல் வந்ததை அடுத்து, அவருக்கு ஏற்ற வேலைப் பொறுப்புகள் நிறுவனத்தில் இல்லை என்று டிசம்பர் 2019ல் தெரிவிக்கப்பட்டது. ஜிஎஸ்கே பயனீட்டாளர் சுகாதாரப் பராமரிப்புடன் தான் செய்துகொண்ட வேலை நியமன ஒப்பந்தம் மீறப்பட்டதன் தொடர்பில் திரு நாயர் $1.24 மி. இழப்பீடு கோரினார். அனைத்து ஊழியர்களையும் சமமாக நடத்தவேண்டும் என்ற கொள்கை உட்பட அதன் சொந்த கொள்கைகள் அனைத்தையும் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று அவர் வாதிட்டார். மேலும், தமது வேலை நீக்க ஊதியத்தில் $148,809.83 குறைவதாகவும் தம் சம்பளத்திலிருந்து $49,503.21 தவறான முறையில் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே, திரு நாயரிடமிருந்து ஜிஎஸ்கே பயனீட்டாளர் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனம் $95,211.87 இழப்பீடு கோரி இருந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் ஒப்பந்தத்தில் ஊழல்; எழுவர் மீது குற்றச்சாட்டு

பேருந்து, ரயில் சேவைகளை இயக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்பில் ஊழல் நடந்துள்ளதாக இதுவரை எழுவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று குற்றம் சாட்டப்பட்ட நால்வரில், நிறுவனத்தின் முன்னாள் மூத்த பொறியாளரும் ஒருவர் என்று கூறப்படுகிறது. நிறுவனத்துடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள 2020க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் பலரிடமிருந்து $35,000க்கும் அதிகமான கையூட்டை 46 வயது டான் ஹூன் கீ பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

தந்தையைக் கொன்றதாக குற்றம்

சாட்டப்பட்டவருக்கு மனநல மதிப்பீடு

தந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 வயது சைலஸ்நர் சியா ஜியே காய், மூன்று வார மனநல மதிப்பீட்டுக்காக தடுத்து வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நீதிமன்றத்தில் காணொளி இணைப்புவழி முன்னிலையான சியா, சிவப்பு நிற போலோ டி-சட்டையில் காணப்பட்டார். சியாவின் வழக்கு அடுத்த மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 10ஆம் தேதியன்று 47 வயதுடைய தன் தந்தை திரு எடி சியா வீ டெக்கை சியா கொலை செய்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.