'ஃபைசர்-பயோஎன்டெக் இருவகை திறன் தடுப்பூசி ஆண்டு முடிவில் கிடைக்கலாம்'
சிங்கப்பூரில் இருவகை திறன்கொண்ட மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி இப்போது 50 வயதும் அதற்கும் அதிக வயதுள்ளவர்களுக்குப் போடப்படுகிறது.
அந்தத் தடுப்பூசி, இந்த ஆண்டின் பிற்பகுதியில் 18 வயது முதல் 49 வரை வயதுள்ளோருக்குப் போடப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். சிங்கப்பூருக்கு அதிக தடுப்பூசி தருவிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை செயல் படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொற்று காரணமாக 50க்கும் மேற்பட்ட வயதினருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இப்போது அவர்களுக்கு அந்தத் தடுப்பூசி போடப்படுகிறது என்று அமைச்சர் விளக்கினார். இருவகை திறன்கொண்ட மொடர்னா தடுப்பூசி அக்டோபர் 14 முதல் போடப்பட்டு வருகிறது.
இருவகை திறன்கொண்ட ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி இந்த ஆண்டு முடிவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் இணைப் பேராசிரியர் ஜேம்ஸ் லிம், கேட்ட கேள்விக்குப் பதில் அளித்து பேசிய அமைச்சர், புதிய கொவிட்-19 உருமாறிய கிருமிக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை இருவகை திறன்கொண்ட தடுப்பூசி வழங்குகிறது என்றார்.
தகுதி உள்ளவர்கள் உடனடியாக அந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் திரு ஓங் யோசனை கூறினார்.
கொவிட்-19 தொற்றில் இருந்து அண்மையில் குணமடைந்தவர்களும் இவர்களில் அடங்குவர்.
தொற்று ஏற்பட்டதற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த ஊசியைப் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இத்தகைய தடுப்பூசியைப் போடுவதற்குத் தோதாக முதியோர் அதிகம் வசிக்கும் வட்டாரங்களில் செயல்படும் சமூக மன்றங்களிலும் சமூக நிலையங்களிலும் தடுப்பூசி நிலையங்கள் மறுபடியும் திறக்கப்படுமா என்று அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் லியோன் பெரேரா கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், இப்போது 10 ஒருங்கிணைந்த பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பெரியவர்களுக்காக ஒரு தடுப்பூசி நிலையமும் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே செயல்படும் 221 பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள், 20 பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றுக்குக் கூடுத லாக அந்த 11 நிலையங்களும் செயல்படுவதாக அவர் கூறினார்.
அந்த நிலையங்கள் எல்லாம் இப்போது தேவையை நிறைவேற்றும் அளவுக்குப் போதியவையாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய வட்டாரங்கள், வசதியான இட அமைப்பு, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தடுப்பூசி செயல்திட்டங்களை மேற்கொள்ள ஆதரவான இடங்கள் போன்ற அம்சங்களைப் பொறுத்து தடுப்பூசி நிலையங்களும் ஒருங்கிணைந்த பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களும் அமைக்கப்படுகின்றன என்றார் அமைச்சர்.

