சிங்கப்பூர் மக்கள்தொகை வேகமாக மூப்படைகிறது. இந்தச் சூழலில் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தக் குறைபாட்டை முன்னதாகவே கண்டுபிடித்து குறைக்கவும் நலமிக்க வாழ்க்கை பாணியைக் கைக்கொண்டு அந்தக் குறைபாடு ஏற்படாமல் பலரையும் காக்கவும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
சுகாதார அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மக்ஸாம் இதனைத் தெரிவித்தார்.
முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு உறுதுணை நாடாக சிங்கப்பூர் திகழ மூன்று அம்ச அணுகுமுறையை சுகாதார அமைச்சு கைக்கொள்கிறது.
பராமரிப்புச் சேவைகளுக்கான ஆற்றலைப் பலப்படுத்துவதும் பராமரிப்புச் சேவை வழங்குவோருக்கான ஆதரவை மேம்படுத்துவதும் அந்த அணுகுமுறையின் இதர இரண்டு அம்சங்கள் என்று அவர் விளக்கிக் கூறினார்.
சிங்கப்பூரின் புதிய நோய் முன்தடுப்பு பராமரிப்பு உத்தியாக 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்டம் இடம்பெறுகிறது.
அதன் வழியாக, மக்கள் தங்கள் உடல் நலனுக்குத் தாங்களே பொறுப்பு எடுத்துக்கொள்ள ஏதுவாக சகாதார அமைச்சு பல திட்டங்களுடன் செயல்படும்.
அதோடு, அப்போதைக்கு அப்போது நடத்தப்படும் உடல்நலப் பரிசோதனைகள் மூலம் முதியவர்கள் யாருக்காவது காது கேளாத பிரச்சினை இருந்தால் அது பற்றி தெரியவரும்.
அத்தகைய குறைபாடு உள்ளவர்களுக்கு காது கேட்பதற்கான கருவி பொருத்தப்படும் என்று திருவாட்டி ரஹாயு கூறினார்.

