சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையினர் நாட்டிற்கு ஆற்றி இருக்கும் பங்களிப்பு களை அங்கீகரித்து அவர்களுக்கு நன்றிகூறும் வகையில், அவர்களின் ஆயுள் முழுவதற்கும் சுகாதாரப் பராமரிப்பைக் கட்டுப்படியாகக்கூடியதாக ஆக்குவதற்காக அரசாங்கம் 2014ல் முன்னோடித் தலைமுறையினர் நிதியையும் 2019ல் மெர்டேக்கா தலைமுறை நிதியையும் உருவாக்கியது.
அந்த நிதியில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, முன்னோடித் தலைமுறையினருக்கு $3.04 பில்லியன் வழங்கப்பட்டு இருக்கிறது. மெர்டேக்கா தலைமுறையினருக்கு $0.72 பில்லியன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதே தேதி நிலவரப்படி, அந்த இரண்டு நிதிகளிலும் முறையே $6.16 பில்லியன் தொகையும் $5.72 பில்லியன் தொகையும் மீதம் இருக்கின்றன.
இதுவரையில் முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த 450,000 பேரும் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த 500,000 முதியோரும் பலன் அடைந்துள்ளனர்.
செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி ஏறத்தாழ 340,000 முன்னோடித் தலைமுறை மக்களும் 480,000 மெர்டேக்கா தலைமுறை மக்களும் இருந்தனர்.
நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் இந்த விவரங்களை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
மெடிசேவ் கணக்கில் பணம் போடுவது, சிறப்பு மெடிஷீல்டு லைஃப் சந்தா மானியங்கள், வெளிநோயாளி சிகிச்சை பெறுவதற்கான மானியங்கள் முதலானவை அந்த நன்மைகளில் உள்ளடங்கும்.
முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்.
அதேபோல, மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தவர்கள் 1950ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் 1959ஆம் டிசம்பர் 31ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவர்கள்.
செம்பவாங் குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் லிம் வீ கியாக், புக்கிட் பாஞ்சாங் தொகுதி உறுப்பினர் லியாங் எங் ஹுவா ஆகியோருக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், எதிர்காலத்தினருக்குச் சுமை வரக் கூடாது என்பதற்காக அந்த இரண்டு நிதி களிலும் அரசாங்கம் கணிசமான தொகையை நிரப்பியதாகத் தெரிவித்தார்.
அந்த நிதிகளில் உள்ள தொகை போதுமா என்பதை ஒவ்வோர் ஆண்டும் நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் மறுபரிசீலனை செய்யும் என்றார் அவர்.

