மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை; அவசரகாலச் சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பு
சிங்கப்பூரின் பொது மருத்துவ
மனைகளின் அவசரநிலை சிகிச்சைப் பிரிவுகளில் கடந்த சில மாதங்களாகவே கூட்ட நெரிசல் பிரச்சினை நிலவுவது தாம் அறிந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய கொவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பால் நிலைமை மோசமடைந்துள்ளதாக அது குறிப்பிட்டது.
அவசரநிலை சிகிச்சைப் பிரிவுகளில் நெருக்கடியைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
உள்நோயாளி சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள மருத்துவக் குழுக்களை அவசரநிலை சிகிச்சைப் பிரிவுகளுக்கு அனுப்புவது, அவசரநிலை சிகிச்சைப் பிரிவுகளில் கூடுதல் படுக்கைகளை அமைத்தல், முடிந்தவரை நோயாளிகளை படுக்கைப் பிரிவுகளுக்கு அனுப்புவது போன்றவை நடவடிக்கைகளில் சில என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படாத நோயாளிகள் சமூக மருத்துவமனைகள் அல்லது தாதிமை இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
164 படுக்கைகள் உடைய செங்காங் சமூக மருத்துவமனையில் இந்த நடைமுறை முதல் முதலில் மேற்கொள்ளப்பட்டது. இடைக்கால பராமரிப்பு சேவைகள் வழங்க கொனெக்ட்@சாங்கி 10 மண்டபம் செப்டம்பர் இறுதிக்குள் படிப்படியாக மாற்றப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பல நடவடிக்கைகள் நடப்பில் இருந்தபோதும் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளால் திடீரென்று அதிகரிக்கும் நோயாளிகள் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாது என்றும் அமைச்சின் பேச்சாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
பொது மருத்துவமனைகளில் படுக்கைக்காகச் சிலர் 50 மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையிலும் செங்காங் பொது மருத்துவமனையிலும் 50 மணி நேரம் வரை படுக்கைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
அவசரநிலை சிகிச்சைப் பிரிவுக்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படும் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு மாற்ற இடம் இல்லாததால் சில வேளைகளில் ஆம்புலன்ஸ் வாகனப் படுக்கை
களிலேயே சிகிச்சை பெறுகின்றனர்.
ஆம்புலன்ஸ்களில் வரும் சில நோயாளிகளை மருத்துவமனை
களின் அவசரகால சிகிச்சைப் பிரிவுகளுக்கு மாற்றுவதற்கே 15-30 நிமிடங்கள் ஆகிறது.
இதனால் தீவிர அல்லது அவரச சிகிச்சை தேவைப்படும் இன்னொரு நோயாளியிடம் செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் வண்டிகளும் காக்க வேண்டியிருக்கிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் பகுதியில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு வரும் அவசர மருத்துவ அழைப்புகள் 32% அதிகரித்துள்ளன. அவற்றில் 93% அழைப்புகள் உண்மையாகவே அவசர சிகிச்சை தேவைப்படுபவை.
அவசரமோ தீவிரமோ இல்லை என்றால் ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைக்கவேண்டாம் என்றும் மருத்துவமனைகளின் அவசரநிலை சிகிச்சைப் பிரிவுகளுக்குச் செல்லவேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

