செயிண்ட் ஆண்ட்ரூஸ் சமூக மருத்துவமனையும் முதியோர் பராமரிப்பு நிலையங்களை நடத்திவரும் வான்கார்ட் ஹெல்த்கேர் அமைப்பும் இணைந்து இவ்வாண்டுத் தொடக்கத்தில் முதியோர் பல் பராமரிப்புக்கான முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
'டி-டாக்ஸ்' எனப்படும் மூத்தோரின் பல் பராமரிப்புக்கான தொலை மருத்துவமுறைத் திட்டம் இது. முதியோரின் வீட்டுக்கு சென்று அவர்களது பல் சுகாதாரத்தைப் பேண இது உதவுகிறது.
குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிதல், வழக்கமான இடைவெளியில் கண்காணித்தல் ஆகியவற்றின் மூலம் முதியோரின் பல் பாதுகாப்பை மேம்படுத்துவது இதன் இலக்கு.
சிங்கப்பூர் தேசிய பல் சிகிச்சை நிலையமும் தெமாசெக் அறநிறுவனமும் இணைந்து இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
தாதிமை இல்லங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தாதிகளுக்கும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் சமூக மருத்துவமனையின் இல்லப் பராமரிப்புக் குழுவினருக்கும் இதன்கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
முதலில் பல் மருத்துவர் ஒருவர் முதியோரைச் சோதிப்பார். அதன்பிறகு பயிற்சி பெற்ற தாதியர், அடிப்படையான பல் மருத்துவச் சோதனைகளை மேற்கொள்வர்.
வாய்க்குள் சோதிக்க உதவும் கேமரா பொருத்திய பரிசோதனைக் கருவியை இவர்கள் பயன்படுத்துவர். பற்சிதைவு, ஈறு வீக்கம் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிய இந்தக் கருவி உதவும்.
பல் பரிசோதனையின் முடிவுகள் மின்னிலக்க முறையில் பதிவு செய்யப்படும். பல் மருத்துவர்கள் அவற்றைப் பார்வையிட்டு, நோயாளிக்கேற்ற சிகிச்சையைப் பரிந்துரைப்பார். பின்னர் அதனைப் பயிற்சி பெற்ற தாதியர் மேற்கொள்வர்.
நடமாட்டப் பிரச்சினை உள்ள முதியவர்கள், இந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஏற்கெனவே பழகிய தாதியரிடம் சிகிச்சை பெறுவதால் பாதுகாப்பாக உணர்வதாக சிலர் குறிப்பிட்டனர்.
முதியோர் பல் சுகாதாரத்தில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்று தெரியவந்ததால் 'டி-டாக்ஸ்' திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறினார் இணைப் பேராசிரியர் கிறிஸ்டினா சிம். முதியோரின் உடல் நலனுக்குப் பல் பராமரிப்பு மிகவும் முக்கியம்; பல் பராமரிப்புச் சேவைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடரவிருக்கும் இத்திட்டத்தில் 199 முதியோர் பங்குகொள்கின்றனர். முதியோர்க்கான பகல்நேரப் பராமரிப்பு நிலையங்கள், மூத்தோர் நடவடிக்கை நிலையங்கள், சிறப்புத் தேவையுடையோருக்கான நிலையங்கள், சிறைச்சாலை ஆகியவற்றுக்கும் இதனை விரிவுபடுத்தத் திட்டமிடப்படுகிறது.

