மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்னிலக்கமயமாதலில் கவனம் செலுத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உத்தரவாதம்
உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நோக்கில் செயல்முறைகளைத் தானியக்க மயமாக்கி, உற்பத்தித்திறனை அதிகரிக்கத் திட்டமிடும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் மானியங்களும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கிடைக்கும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அனைத்துலக வாய்ப்புகளைப் பெறவும் உலகளாவிய சவால்களைச் சமாளிக்கவும் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
சிங்கப்பூர் மலாய் வர்த்தக, தொழிற்சபையின் விருந்து, விருதளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். கடந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மலாய் வர்த்தக நிறுவனங்களுக்கு இந்நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.
நிதியமைச்சருமான திரு வோங் தமது உரையில், கொவிட்-19 கிருமிப் பரவலின் மோசமான காலகட்டம் முடிவுற்றபோதிலும், உலகம் புதிய சவால்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
நாடுகளுக்கு இடையிலான அரசியல் பதற்றம், அதிகரிக்கும் வட்டி விகிதங்கள், ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர், அதன் விளைவாக உலகெங்கும் எரிபொருள், உணவு ஆகியவற்றின் விநியோகம் தடைபட்டதால் ஏற்பட்ட பணவீக்கம் ஆகியவற்றை அவர் சுட்டினார்.
இத்தகைய சவால்களுக்கு இடையிலும் சிங்கப்பூருக்கும் இந்த வட்டாரத்திற்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதாகத் துணை பிரதமர் கூறினார்.
சிங்கப்பூர்ப் பொருளியல் இந்த ஆண்டு மூன்று விழுக்காடு முதல் நான்கு விழுக்காடுவரை விரிவடையும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு வோங், தென்கிழக்காசியாவின் பொருளியல் வளர்ச்சியும் நன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்குக் கூடுதல் உதவி வழங்கப்படும் என்றார் அவர்.
இத்தகைய நிறுவனங்களுக்கு மின்னிலக்கமயமாதல் தொடர்ந்து கைகொடுப்பதாகக் கூறிய துணைப் பிரதமர், அது நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதோடு அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் உதவுவதாகக் கூறினார்.
வர்த்தகச் செயல்பாடுகளை மின்னிலக்கப் படுத்தியுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கூடுதல் வருவாய் ஈட்டியதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக அவர் சொன்னார்.
மலாய், முஸ்லிம் வர்த்தகங்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தோடு தொடர்ந்து செயல்படுமாறு சிங்கப்பூர் மலாய் வர்த்தக, தொழிற்சபையைத் திரு வோங் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டுகளில் தொழிற்சபையின் இத்தகைய முயற்சிகளைப் பாராட்டிய துணைப் பிரதமர், ஒற்றுமையுடன் செயல்பட்டால் சவால்களைச் சமாளித்து வலிமையுடன் மீண்டு வரலாமென்று தாம் நம்புவதாகக் கூறினார்.

