'பன்முகத்தன்மை பேணும் சமூகத்தை அமைக்க சிங்கப்பூரர்கள் விருப்பம்'
பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவை சிங்கப்பூரின் வருங்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அம்சங்கள். சிங்கப்பூரர்கள் இவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
'முன்னேறும் சிங்கப்பூர்' கலந்துரையாடலில் நேற்று முன்தினம் அவர் இவ்வாறு கூறினார். சிங்கப்பூரர்கள் பல இனங்களையும் சார்ந்த முதியோர், உடற்குறையுள்ளோர் என அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க விரும்புவதாகத் திரு வோங் கூறினார். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிங்கப்பூரின் வருங்காலம் குறித்த கலந்துரையாடலில் ஏறத்தாழ 110 பேர் பங்குபெற்றனர். பல்வேறு கல்விப் பாதைகளை உருவாக்குவது குறித்தும் முதியோருக்கும் இளையர்க்கும் இடையிலான தலைமுறை இடைவெளிக்குத் தீர்வுகாண்பது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
உடற்குறையுள்ளோருக்கு வேலை தரும்படி முதலாளிகளுக்கு வலியுறுத்து
சிங்கப்பூரில் கூடுதலான நிறுவனங்களும் முதலாளிகளும் உடற்குறையுள்ளோரைக் கைதூக்கிவிட முன்வர வேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியிருக்கிறார்.
தங்கள் நிபுணத்துவம், வளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இத்தகையோர் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவற்கு நிறுவனங்கள் பங்களிக்கலாம் என்றார் அமைச்சர். உடற்குறையுள்ளோரின் திறன்களை வேலையிடத்தில் அங்கீகரிக்க உதவும் வகையில் கூடுதலான நிறுவனங்கள் அனைவரையும் உள்ளடக்கிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 'எஸ்ஜி கேர்ஸ் நெட்வொர்க்' நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். சமூகசேவை அமைப்புகள், தொண்டூழியர்கள், பொதுமக்கள் ஆகிய தரப்பினர் சிங்கப்பூரின் சமூகப் பிணைப்பை மேம்படுத்தும் வழிவகைகள் குறித்து இதில் கலந்துரையாடினர்.

