போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 117 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்ற மாதம் 10ஆம் தேதிக்கும் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தீவெங்கும் நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். சுமார் 19,000 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா சேர்க்கப்பட்டதாக நம்பப்படும் மிட்டாய்களை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் 'பார்சல் போஸ்ட் ஸ்டேஷன்' அஞ்சல் நிலையத்தில் கண்டுபிடித்தனர். இளையர்களை ஈர்ப்பதற்காக கஞ்சா போன்றவை மிட்டாய்கள் உள்ளிட்டவற்றில் சேர்க்கப்பட்டு அவை சாதாரண உணவு வகைகளாக விற்கப்படுவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று தெரிவித்தது. சுகாதாரப் பொருள்களாக விற்கப்படும் சில பொருள்களிலும் கஞ்சா சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அது குறிப்பிட்டது.

