தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூவகைப் போட்டியில் பங்கேற்ற சிங்கப்பூரர் மரணம்

1 mins read
39834422-8343-45f9-9ccf-93ed85fdf574
மூவகைப் போட்டியின் நீச்சல் அங்கம். படம்: ஐயன்மேன் போர்ச்சுகல் -

போர்ச்சுகலில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற மூவகைப் போட்டியில் (triathlon) பங்கேற்ற 36 வயது சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்தார்.

திரு டெரிக் டீ என அடையாளம் காணப்பட்ட அந்த ஆடவர், 'ஐயன்மேன் போர்ச்சுகல்-கஸ்காயிஸ்' போட்டியில் பங்கெடுத்தார்.

'ஐயன்மேன் போர்ச்சுகல்' நேற்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், மூவகைப் போட்டியின்போது பங்கேற்பாளர் ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது. இந்த மூவகைப் போட்டியில் 1.9கி.மீ. நீச்சல், 90கி.மீ. சைக்கிளோட்டம், 21கி.மீ. ஓட்டம் ஆகிய அங்கங்கள் இடம்பெற்றன.

"இப்போட்டியின் நீச்சல் அங்கத்தின்போது, பங்கேற்பாளருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதை அடுத்து அது வழங்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

"மருத்துவ ரீதியாக பெரிய முயற்சி எடுக்கப்பட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் அவர் ஆம்புலன்சில் இறந்துவிட்டார். அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தச் சிரமமான கட்டத்தில் எங்களது ஆதரவை அவர்களுக்குத் தொடர்ந்து வழங்குவோம்," என்று ஐயன்மேன் போர்ச்சுகல் அதன் பதிவில் குறிப்பிட்டது.

ஐயன்மேன் இணையப் பக்கத்தின்படி, மூவகைப் போட்டியில் பங்கெடுத்த ஒரே சிங்கப்பூரர் ஆவார் திரு டீ. இப்போட்டியில் ஏறக்குறைய 4,800 பேர் பங்கெடுத்ததாகக் கூறப்படுகிறது.