தீபாவளி என்றாலே புத்தாடைகளும் பலகாரங்களும்தான் முதன்மை வகிக்கிறது. குறிப்பாக தீபாவளிக்கிப் புத்தாடைகள் உடுத்தி உற்றார், உறவினர், நண்பர்களைச் சந்திப்பது அலாதி ஆனந்தம்.
அந்தக் குதூகலத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வருகிறது தமிழ் முரசின் 'முரசு காப்பி கடை' வலையொளி.
மின்னிலக்கத் தளம், சமூக ஊடகப் பக்கங்கள் என விரிவடைந்து வரும் தமிழ் முரசு, தற்போது வலையொளியிலும் கால்பதித்துள்ளது.
முதல் வலையொளி அங்கத்தில் பொன்னியின் செல்வன் நூலையும் திரைப்படத்தையும் ஒப்பிட்டு, திரையுலகிலும் மக்களிடத்திலும் அது பதித்துள்ள தாக்கத்தைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.
அடுத்த இரு வாரங்களுக்கு தீபாவளிப் பண்டிகையைச் சார்ந்த வலையொளிகளையும் தமிழ் முரசு வாசகர்கள் எதிர்பார்க்கலாம்.
வலையொளிகள் பிரபலமடைந்துள்ள தற்சமயத்தில், அவற்றின் மூலம் தமிழ் முரசு செய்தியாளர்கள் தங்களது தனிப்பட்ட கருத்துகளையும், உள்ளூர், உலக செய்திகளையும் முன்வைக்கவிருக்கின்றனர்.
இனி வாசகர்கள் வாரந்தோறும், அரசியல், வாழ்வியல், பண்பாடு எனப் பல்வேறு தலைப்புகளை அலசி ஆராயும் வலையொளிகளை எதிர்பார்க்கலாம்.
தமிழ் முரசின் வலையொளி முயற்சியைக் குறித்து கூறுகையில் தமிழ் முரசின் மின்னிலக்க ஆசிரியர் திரு தமிழவேல், "செய்திகள் வாசகர்களைத் தேடி செல்லவேண்டிய காலத்தில் உள்ளோம். "வலையொளி முயற்சிகளைத் தமிழ் முரசு சற்றே தாமதமாக எடுத்திருந்தாலும், தமிழ் முரசு காப்பி கடை மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெறும் என நம்புகிறோம்," என்றார்.
தொடர்புடைய செய்திகள்
87 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ் முரசு செய்தித்தாள், வரும் காலத்தில் பிரபலமடையும் வெவ்வேறு தளங்களிலும் காலடி எடுத்து வைக்கும் எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் முரசு காப்பிக் கடை வலையொளிகளை, ஸ்பாட்டிஃபை, யூடியூப் தளங்களிலும் தமிழ் முரசின் இணையப்பக்கத்திலும் காணலாம்.
- ஸ்பாட்டிஃபை: Tamil Murasu Kopi Kadai
- இணையத்தளம்: https://www.tamilmurasu.com.sg/podcasts
- யூடியூப்: https://youtu.be/4191__ey9Y0


