துன்பம் வந்தபோதும் ஒன்றுபட்டு உயர்ந்து நிற்கும் இந்திய சமூகம்

தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகுவதைக் குறிக்க இருள் நீக்கி ஒளியேற்றுவதையே தீபாவளி என்கிறோம். பல இன சிங்கப்பூரில் அனைத்து இன, சமய மக்களையும் திருவிழா போன்ற உணர்வில் திளைக்க வைக்கிறது தீபாவளி. கொரோனா எனும் தீமை நீங்கிய தீபாவளியை இந்த ஆண்டு கொண்டாடு கிறோம்.

2020ஆம் ஆண்டில் வீரியம் கொண்ட கொவிட்-19 அலை டெல்டா, ஓமிக்ரான் என உருமாறிய கிருமிகளின் அலைகளைக் கடந்து, தற்போதுள்ள 'எக்ஸ்பிபி' அலையை, கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு கையாண்டு வருகிறோம். உடலளவிலும் மனத்தளவிலும் கொவிட்-19 ஏற்படுத்திய காயங்களும் கற்பித்த பாடங்களும் சிங்கப்பூர் மக்களை மேலும் வலிமையாக்கியுள்ளது.

சிங்கப்பூரில் வாழும் இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கிய சவால்களில் இனவாதத் தாக்கு தல்களும் உண்டு. இருப்பினும் அத்தகைய சூழலிலும் சிந்திக்கும் மக்களாக, முதிர்ச்சி அடைந்த சமூகமாக சிங்கப்பூர் எனும் ஒரே கூரையின்கீழ் சிங்கப்பூரர் என்ற ஒரே அடையாளத்தில் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டதைப் போல் ஒன்றுபட்டவர்களாக இந்திய சமூகத்தினர் விளங்கினர்.

அண்மையில் 'நம்பிக்கை ஒளி' எனும் தீபாவளிக் காணொளி ஒன்றை வெளியிட்டுப் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இனவாத சம்பவங்களை மேற்கோள்காட்டி "சிங்கப்பூரர்களுடன் ஒன்றிணைந்து நமது சிங்கப்பூரைக் கட்டிக்காத்தோம்" என இந்திய சமூகத்தை மெச்சினார்.

உலக மக்களாக, நாட்டின் குடிமக்களாக, சமூகத்தின் அங்கமாக, குடும்ப உறுப்பினராக பல பரிமாணங்களிலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, இன்று வலிமையான மக்களாக அனைவரும் உருவாகி உள்ளோம்.

சிறுபான்மை சமூகமாக இருந்தாலும் மெச்சத்தக்க சமூகமாக இருப்பது நமது செயல்களுக்குக் கிடைத்த அங்கீகாரம். பழிச்சொற்களையும் இனவாதச் செயல்களையும் வேறு விதத்தில் கையாண்டு பிரச்சினைகளை வளர்த்திருந்தால் இன்று விளைவுகள் அனைவரையும் பாதிக்கும் அளவில் முடிந்திருக்கலாம். அதற்கு நம் வரலாற்றில் சான்றுகள் உண்டு.

அதைப் போலவே வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதியிலும் பல்வேறு பிரச்சினைகள்.

முதன்முதலில் கொவிட்-19 அலை தங்குவிடுதி களில் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் அந்த வளாகங்கள் தனிமைப்படுத்தப்படும் இடங்களாக அறிவிக்கப்பட்டன.

தொடக்க காலத்தில் சில வசதியின்மைகள், அக்கறையற்ற செயல்களால் அவர்கள் அவதிப்பட்டனர்.

என்றாலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சமூகத்தின் நலன் கருதி தங்களின் விருப்பு வெறுப்புகளைத் ஒதுக்கிவிட்டு ஒரே நாடாக ஒரே சமூகமாக நம்மோடு அவர்கள் பயணித்தனர்.

கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் பல நல்ல முயற்சிகளிலும் இந்திய சமூகத்தினரின் தன்னலமற்ற செயல்கள் வெளிப்பட்டன.

முதன்முதலில் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டபோது தடுப்பூசிப் போட்டுக் கொண்டோரில் டாக்டர் காளீஸ்வர் மாரிமுத்து இரண்டாம் சிங்கப்பூரராக விளங்கினார்.

மொழி புரியாமல், தகவல்களைச் சரிவரத் தெரிந்துகொள்ள முடியாது வெளிநாட்டு ஊழியர்கள் தவித்தபோது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற 24 வயது சுதேஸ்னா ராய் சௌத்ரி தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வங்காள மொழிபெயர்ப்புச் செயலியை உருவாக்கினார்.

இச்சிரம காலத்தில் தாதியர், தாதிமை இல்லப் பணியாளர்கள், மருத்துவர்கள், துப்புரவாளர்கள், சக சிங்கப்பூரர்கள் என பல்வேறு நிலைகளிலும் முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் பல இந்தியர்கள் திகழ்ந்தனர்.

கிருமித்தொற்றின் பேயாட்டம் ஓய்ந்த பின்னரும் தொண்டூழிய அமைப்புகளும் தனிநபர்களும் பல்வேறு வழிகளில் முனைப்புடன் சேவையளித்து வருகின்றனர்.

லைட்டிங் ஹார்ட்ஸ் லைட்டிங் ஹோம்ஸ், இட்ஸ்ரெய்னிங் ரெயின்கோட்ஸ் போன்ற அமைப்புகளும் தங்களால் முடிந்த வழிகளில் வசதி குறைந்தோர், வருமானம் குறைந்த குடும்பங்கள், வெளிநாட்டு ஊழியர்கள் என பல்வேறு குழுக்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், இந்திய நற்பணிப் பேரவை போன்ற அமைப்புகளும் கிருமிப் பரவல் சூழல் என்று பாராமல் தங்களின் நடவடிக்கைகளில் எந்தத் தொய்வுமின்றி செயல்பட்டன.

கடந்த பல ஆண்டுகளாக ஏப்ரல் மாதத்தில் நடந்துவரும் தமிழ்மொழி விழாவும் கொவிட்-19 அலைகளால் முடங்கிவிடவில்லை, மாறாக ஒத்தி வைக்கப்பட்டு முற்றிலும் மெய்நிகரில் நடத்தப்பட்டது.

பல சவால்களையும் கடந்த நாம் மீண்டும் ஒளி மிக்க எதிர்காலத்தைத் தேடிச் செல்வோம். தொடர்ந்து சமூகத்தில் ஒற்றுமை பேணி, மகிழ்ச்சி பொங்கும் சமூகமாக விளங்குவோம்.

அமைச்சர் சண்முகம் கூறியதுபோல இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வலிமையோடும் ஒற்றுமையோடும் வந்த சமூகமாக உள்ளோம்.

எல்லாநிலையிலும் பொறுமைகாத்து, பெருந்தன்மை யோடு செயல்பட்டதால் இன்று பல இன சிங்கப்பூரின் பெருமைமிகு மக்களாக வாழ்கிறோம்.

தொடர்ந்து சமூகத்தின் அங்கமாக, நாட்டின் குடிமக்களாக எந்த ஒரு நிலையிலும் தன்னலம் கருதாமல் சமூக சிந்தனையோடு சேர்ந்தே பயணித்தால் எவ்வித சவாலையும் எளிதில் எதிர் கொண்டு வெற்றிபெறலாம் என்பதை மனத்தில் நிறுத்தி மேலும் மேலும் முன்னேறுவோம்.

இந்த அறைகூவலை பிரதிபலிக்கும் வகையில் தீபாவளி மத்தாப்புகள் எங்கும் ஒளிவீசட்டும். தீவு எங்கும் தீபாவளி மகிழ்ச்சி பெருகட்டும்.

முரசொலி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!