சின் மிங் கோர்ட் பகுதியில் சுற்றித் திரியும் கோழிகளின் எண்ணிக்கையைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலன் அளித்துள்ளன என்று இவ்வாண்டு முற்பகுதியில் அமைக்கப்பட்ட பணிக் குழு தெரிவித்திருக்கிறது.
அந்தக் கோழிகளில் 30 அதாவது ஏப்ரல், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தலா 10 வீதம் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கோழிகளுக்குத் தீனி போட வேண்டாம், அவற்றின் முட்டைகளை வேட்டையாட வேண்டாம், அந்தப் பகுதியில் கோழிகள் கூடு கட்டுவதைத் தவிர்க்க அங்குள்ள உள்ள புல்லை வெட்டிவிடுவது, மரத்தில் கோழிகள் தூங்குவதைத் தவிர்க்க மரங்களில் வலைகளைப் பொருத்துதல் போன்றவை பற்றி மக்களுக்குத் தெரிவித்தல் இதர நடவடிக்கைகளில் அடங்கும்.
கோழிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க 'ஒவிஸ்டாப்' எனும் கருத்தடை அம்சம் உள்ள தீனி அந்தப் பகுதியில் இம்மாத இறுதியில் விநியோகிக்கப்படும் என்று கூறிய பணிக் குழுவின் தலைவர் கோ சிம் சிக், இவற்றை நடைமுறைப்படுத்த விரும்பும் தனிநபரை, பண்ணையைக் கண்டுபிடிப்பதில் சிரமமாக உள்ளது என்றும் கோழிகளைக் கூண்டுகளில் அடைத்துவைக்க தகுந்த இடத்தைத் தேடுவதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாக விவரித்தார்.
"2021 டிசம்பரில் அங்கு 90 கோழிகள் இருந்தன. புதிய நடவடிக்கைகள் மூலம் அந்த எண்ணிக்கையை தற்போதுள்ள 50க்குக் குறைக்க முடிந்துள்ளது. இதை மேலும் 30க்குக் குறைக்க எண்ணம் கொண்டுள்ளோம்," என்று திரு கோ மேலும் கூறினார்.
கோழிகளைக் கொல்வதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான வழிகளின் மூலம் அவை குறைக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் கடந்த மார்ச் மாதத்தில் தெரிவித்தன. இந்தப் பிரச்சினை 2017 முதல் இருந்து வந்துள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள 15 புளோக்குகளின் குடியிருப்பாளர்கள் கோழிகள் அதிகாலை 2 மணிக்குக்கூட கூவி, தங்கள் தூக்கத்தைக் கெடுக்கின்றன என்று குறை கூறினர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, அந்தக் கோழிகளுக்கு தேசிய பூங்காக் கழகம் கருத்தடை அம்சம் உள்ள தீனிகளைக் கொடுக்காது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"கோழிகளை இடம் மாற்றுவது நீண்டகால தீர்வாகாது. அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க ஒரே வழி அவற்றுக்குத் தீனி போடுவதை நிறுத்துவதே," என்றார் ஏக்கர்ஸ் எனும் விலங்கு அக்கறை ஆய்வு மற்றும் கல்விச் சங்கத்தின் இணைத் தலைவர் அன்பரசி பூபாலன்.

