சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) தனது விமானச் சிப்பந்தி தேவையைப் பூர்த்தி செய்ய தென்கொரியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தனது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.
ஆசிய சந்தைகளில் எல்லைக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டிருப்பதால், அங்கிருந்து விமானச் சிப்பந்திப் பணிக்காக ஆட்சேர்க்க எஸ்ஐஏ நிறுவனத்துக்கு ஏதுவாக இருக்கிறது. ஹாங்காங், ஜப்பான், தைவான் ஆகியவை தனது அனைத்துலக விமான சேவைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிகமான விமானச் சிப்பந்திகள் உடனடியாகத் தேவைப்படுகின்றனர்.
செப்டம்பருக்கு முன், மலேசியாவிலிருந்து மட்டும்தான் விமானச் சிப்பந்திகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர்.
பெருந்தொற்றுக்கு முன்னதாக, ஹாங்காங், சீனா, இந்தியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து விமானச் சிப்பந்தி பணிக்காக ஆட்கள் சேர்க்கப்பட்டனர். இந்தச் சந்தைகளில் அடுத்த ஆட்சேர்ப்பு படிப்படியாகத் தொடங்கும் என்றும் எஸ்ஐஏ தெரிவித்தது.
"பல்வேறு காரணங்களுக்காக வேலையிலிருந்து விலகிய விமானச் சிப்பந்திகளுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்கவும் எஸ்ஐஏயின் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாகவும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. எவ்வளவு ஆட்கள் தேவைப்படுகின்றனர் என்பது காலத்துக்கேற்ப மாறுபடும்," என்றும் அது விவரித்தது.
பெருந்தொற்று காலத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை எஸ்ஐஏ நிறுத்திவைத்திருந்தது. பல விமானச் சிப்பந்திகளை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை சம்பளமில்லா விடுப்பில் போகச் சொல்லியது எஸ்ஐஏ.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் எஸ்ஐஏ சுமார் 1,200 விமானச் சிப்பந்திகளை வேலைக்கு அமர்த்தியது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 800 விமானச் சிப்பந்திகளை வேலையில் அமர்த்த அது திட்டமிட்டுள்ளது.

