தெம்பனிசில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் 70 வயது ஆடவரும் அவரது 92 வயது தாயாரும் சனிக்கிழமை காலை இறந்து கிடக்க காணப்பட்டனர். சம்பவம் குறித்து தங்களுக்கு அன்று காலை 11.56 மணிக்கு அழைப்பு வந்தது என்று காவல்துறை கூறியது.
தெம்பனிஸ் ஸ்திரீட் 22, புளோக் 285ன் 11வது மாடியில் உள்ள வீட்டுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அங்கு இருவரது அசைவற்ற உடல்களைக் கண்டனர். அவர்கள் இருவரின் மரணம் சம்பவ இடத்திலேயே துணை மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.
அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது என்று அண்டை வீட்டார் ஷின்மின் நாளிதழிடம் கூறினர்.
அந்த புளோக்கின் 10வது மாடியில் வசிக்கும் குடியிருப்பாளர் கடந்த ஒரு வாரமாகவே அந்த துர்நாற்றம் வீசியதாகவும் அது மற்ற குடியிருப்பாளர்களின் சமையல் காரணமாக இருக்கலாம் என்று தான் நினைத்ததாகக் கூறினார்.
ஆரம்பகட்ட விசாரணையில் அந்த மரணங்களில் சூது ஏதும் இல்லை என்று தெரியவந்தது என்றும் விசாரணை தொடர்கிறது என்றும் காவல்துறை கூறியது.

