சிங்கப்பூரில் நான்காவது முட்டைப் பண்ணையை 2024 ஆண்டுக்குள் திறக்க சிங்கப்பூர் உணவு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இசே ஃபூட்ஸ் எனும் உள்ளூர் நிறுவனம், ஜப்பானின் முன்னணி முட்டை தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பண்ணையை ஏற்றுநடத்தும்.
முழுமையாக செயல்படும்போது அந்த பண்ணையில் ஆண்டுதோறும் 360 மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படும். அதோடு, முட்டை உற்பத்திக்கு ஒவ்வோர் ஆண்டும் ஐந்து மில்லியன் கோழிக் குஞ்சுகளும் அங்கு வளர்க்கப்படும். இதன் மூலம் சிங்கப்பூரின் முட்டை தேவையில் பாதி அளவு பூர்த்தி செய்யப்படும் என நம்பப்படுகிறது.
சிங்கப்பூரின் 30 விழுக்காடு ஊட்டச்சத்து தேவையை உள்ளூரிலே தயாரிக்க இந்தப் பண்ணை உதவும் என்று இசே ஃபூட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
லிம் சு காங் வட்டாரத்தில் பத்து ஹெக்டர் பரப்பளவில் அந்தப் பண்ணை அமைக்கப்படும்.
2026 ஆண்டுக்குள் பண்ணை முழுமையாக செயல்பாட்டில் இருக்கும்போது, துவாஸ் மற்றும் சுங்கை தெங்கா இடங்களில் கோழிப் பண்ணை மற்றும் கோழிக் குஞ்சு பொரிப்பதற்கான ஆகிய வசதிகள் இருக்கும். இந்த திட்டத்திற்கான மொத்த செலவு $100 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.


