6 மாதம் - 4 வயது வரையிலான சிறார்க்கு கொவிட்-19 தடுப்பூசி
சிங்கப்பூரில் ஆறு மாதம் முதல் நான்கு வயது வரையிலான சிறார்க்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்றுக் காலை நேரத்தில் தடுப்பூசி நிலையங்களில் தங்கள் இளம் பிள்ளைகளை அழைத்துவந்திருந்த பெற்றோர் கூட்டம் நிரம்பியிருந்ததாகக் கூறப்பட்டது.
பொங்கோல், தெம்பனிஸ், குவீன்ஸ்டவுன் உட்பட ஐந்து தடுப்பூசி நிலையங்களில் ஆறு மாதம் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு சென்ற வாரம் தொடங்கியது. இந்நிலையங்களில் 'மொடர்னா ஸ்பைக்வேக்ஸ்' தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
குறைந்தது எட்டு வார இடைவெளியில் இருமுறை 25 மைக்ரோகிராம் அளவிலான தடுப்பு மருந்து இவர்களுக்குச் செலுத்தப்படும்.
'ஒன் பொங்கோல்' தடுப்பூசி நிலையத்தில் முதல் இரண்டு மணி நேரத்திற்குள் 53 பிள்ளைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிறார்களை ஈர்க்கும் வண்ணம் இந்நிலையம் கேலிச் சித்திரக் கதாபாத்திரங்களின் படங்களைச் சுவர்களில் ஒட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
செம்பவாங் சமூக மன்ற தடுப்பூசி நிலையத்தில் நேற்று 400 சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
காலையில் இங்கு கூட்டம் அதிகம் இருந்தபோதும் நண்பகல் வாக்கில் ஏறக்குறைய 10 குழந்தைகளும் அவர்களைச் சார்ந்தோரும் மட்டுமே காணப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
இரு நிலையங்களிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை உணர்ந்திருப்பதாகக் கூறினர்.
ஊசி குறித்த குழந்தைகளின் பயத்தைப் போக்க, முன்கூட்டியே பிள்ளைகளிடம் எடுத்துக்கூறியதாகவும் பெற்றோர் ஊசி செலுத்திக்கொண்டதைக் கூறி அது அவசியம் என்று விளக்கியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு, 'ஃபைசர் கமிர்னட்டி' தடுப்பூசியைச் செலுத்துவதற்கும் சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மூன்றுமுறை செலுத்தக்கூடிய அந்தத் தடுப்பூசி இந்த ஆண்டிறுதியில் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

