சுகாதார அறிவியல் ஆணையம், 12ம் அதற்குமேலான வயதும் நிரம்பியவர்களுக்கு 'ஃபைசர்-பயோன்டெக்' இருவகைத் திறன்கொண்ட கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்த இடைக்கால ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொவிட்-19 கிருமி, அதன் ஓமிக்ரான் BA.4, BA.5 திரிபுகள் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பாற்றலை இம்மருந்து வழங்குகிறது. இதனை ஏற்கெனவே முதற்கட்டத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு 'பூஸ்டர்' தடுப்பூசியாகப் போடலாம்.
இந்தத் தடுப்பு மருந்து தயாரானவுடன் அதைப் பயன்படுத்துவதற்கான முறை குறித்து, சுகாதார அமைச்சும் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான வல்லுநர் குழுவும் அதிகாரபூர்வ பரிந்துரையை வெளியிடும் என்று ஆணையம் தெரிவித்தது.
இடைக்கால ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு ஃபைசர், பயோன்டெக் நிறுவனங்கள் அவற்றின் ஆய்வுப் பரிசோதனை குறித்த தரவுகளை ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தன. புதிய தடுப்பு மருந்தால் பக்க விளைவுகளைக் காட்டிலும் நன்மைகளே அதிகம் என்பதை உறுதிசெய்வதற்காக இந்தத் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
ஆய்வில் கலந்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட 80 பேர் ஓமிக்ரான் BA.4, BA.5 திரிபுகளுக்கு எதிராகவும் தடுப்பாற்றல் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருவகைத் திறன்கொண்ட தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஆணையம் குறிப்பிட்டது.
இதனைச் செலுத்திக்கொள்வோர் ஓரிரு நாள்களுக்கு ஊசி செலுத்திய இடத்தில் வலி, சோர்வு, தலைவலி, தசை வலி போன்ற பக்கவிளைவுகளை எதிர்கொள்ளக்கூடும்.

