கரியமில வாயு வெளியேற்றத்தில் சமநிலை எட்டும் சிங்கப்பூரின் முயற்சியில் ஹைட்ரஜன் வாயு முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் கிட்டத்தட்டை பாதியை குறைவான கரியமில ஹைட்ரஜன் வாயுவிலிருந்து பெற இயலும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது அதிலிருந்து மிகக் குறைந்த அளவே கரியமில வாயு வெளியேறும். அண்மைய ஆண்டுகளில் இதில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்திருப்பதையும் அரசாங்கக் கொள்கைகள் இதற்கு ஆதரவு தருவதையும் திரு வோங் தமது உரையில் சுட்டினார்.
கடல்துறை, விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் குறைவான கரியமில எரிபொருளைத் தயாரிக்கவும் ஹைட்ரஜன் வாயு பயன்படும் என்றார் அவர்.
உள்நாட்டு விநியோகம் மட்டுமன்றி ஆசியாவுக்கான ஹைட்ரஜன் விநியோகச் சங்கிலியை உருவாக்கவும் விரைவில் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை சிங்கப்பூர் சோதித்துப் பார்க்கும் என்றார் துணைப் பிரதமர். தொடர்ந்து ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

