குறைவான கரியமில வெளியேற்றம் கொண்ட ஹைட்ரஜன் வாயு, அதனை ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு எடுத்துச்செல்ல உதவுவதும் கடல்துறையில் எரிபொருளாகப் பயன்படக்கூடியதுமான அம்மோனியா ஆகியவற்றின் விநியோகம் தொடர்பில் நேற்று பல்வேறு இணக்கக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தில் சமநிலையை எட்ட விரும்பும் சிங்கப்பூரின் முயற்சிகளில் ஹைட்ரஜன் வாயு முக்கியப் பங்காற்றும் எனும் அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானவுடன் இந்த இணக்கக் குறிப்புகள் கையெழுத்தாயின.
செம்ப்கார்ப் நிறுவனம், ஹைட்ரஜன் தயாரிப்பு, அம்மோனியா விநியோகம் ஆகியவை தொடர்பில், ஜப்பானைச் சேர்ந்த மூன்று பெருநிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
கெப்பல் நிறுவனம், ஆண்டுக்குக் குறைந்தது 250,000 டன் பசுமை அம்மோனியாவை உற்பத்தி செய்வது தொடர்பில் இந்தியாவின் கிரீன்கோ நிறுவனத்துடன் உடன்பாடு செய்துகொண்டது. இதில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி பயன்படுத்தப்படும்.
நேற்றைய சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சிக்கு இடையே இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்ட நிறுவனங்களில், துவாஸ் பவர், வோபாக் சிங்கப்பூர் போன்றவையும் அடங்கும்.