செயற்கை நுண்ணறிவாற்றல் துறைக்குத் திறனாளர்களை ஈர்க்கவும் அவர்களது திறன் மேம்பாட்டிற்கும் சிங்கப்பூர் 71 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவிருக்கிறது.
புத்தாக்கத்துக்கான மூன்று புதிய நிலையங்களைத் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் புத்தாக்கத் திட்டங்களைச் சோதிக்க இந்தப் புதிய நிலையங்கள் உதவும்.
கட்டுமானத்துக்கான நவீன பொருள்கள், நகர்ப்புற வேளாண்மை, அழகுப் பராமரிப்புப் பொருள்கள், சுகாதாரப் பராமரிப்புப் பொருள்கள் ஆகியவை தொடர்பான புத்தாக்க யோசனைகளை நிறுவனங்கள் இந்த நிலையங்களில் சோதித்துப் பார்க்கலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (படம்) தெரிவித்தார். சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப வாரம் 2022ன் தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
மனிதவளப் பற்றாக்குறை, அதிவேகமாக மாற்றமடையும் தொழில்நுட்பம், மந்தமான நீடித்த நிலைத்தன்மை முன்னேற்றம் ஆகிய மூன்று அம்சங்கள் புத்தாக்கத்துக்குத் தடைக்கற்கள் என்றார் திரு ஹெங்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவாற்றல் துறையில் தொழில்முறைப் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கையை இருமடங்காக்க சிங்கப்பூர் திட்டமிடுகிறது என்றார் அவர்.
இதன் தொடர்பில் புதிதாக தேசிய ஆய்வு அறநிறுவனக் கல்விமான் மானியம் உருவாக்கப்படும். இதனைப் பெறும் சிறந்த ஆய்வாளர்கள், புதிய திறனாளர்களை ஈர்க்கவும் அவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கவும் இயலும் என்பதைத் துணைப் பிரதமர் சுட்டினார்.
சிறந்த திறனாளர்கள் சிங்கப்பூரில் தங்கள் அடித்தளத்தை அமைக்க முன்வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய கல்விமுறைகள், புத்தாக்கம் போன்ற முக்கிய துறைகளில் தொழில்நுட்பத் திறனாளர் தேவையை ஈடுகட்டத் திணறிவரும் வேளையில் திரு ஹெங்கின் கோரிக்கை வெளிவந்துள்ளது.
புதிய பொருள்களையும் தீர்வுகளையும் உருவாக்க புத்தாக்கம்தான் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் என்று கூறிய அவர், பசுமை உருமாற்றத்துக்கான நிதியுதவித் திட்டங்களை சிங்கப்பூர் நடைமுறைப்படுத்தும் என்றார்.

