நீடித்த நிலைத்தன்மை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிங்கப்பூர்
வளரும் நாடுகள், நீடித்த நிலைத்தன்மை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூரின் அனுபவத்தைத் தெரிந்துகொள்ள உதவும் பாடத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நீர்வள நிர்வாகம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அமைந்திருக்கும். இந்தப் பாடங்கள், நீடித்த நிலைத்தன்மை, பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வுகாண உதவும். இந்த மாதம் 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ் இப்பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கரியமில வாயு வெளியேற்றத்தை அகற்றுவது, பசுமைத் திட்டங்களுக்கான நிதியுதவி, நிர்வாகம், நீடித்த நிலைத்தன்மை கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் இவை கைகொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆப்பிள்: பயனாளர்கள் அண்மைய மென்பொருளைப் பதிவிறக்கம் செய்க
ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களைப் பயன்படுத்துவோர் ஆக அண்மைய மென்பொருள் பதிப்பான 'ஐஓஎஸ் 16.1', 'ஐபேட் ஓஎஸ்16' ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஒன்பதாவது முறையாக கண்டறியப்பட்ட பிழையைச் சரிசெய்ய இதுதான் வழி என்று கூறப்பட்டது. சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு நேற்று முன் தினம் வெளியிட்ட எச்சரிக்கைக் குறிப்பில், பாதிக்கப்பட்ட பயனாளர்கள் உடனடியாக ஆக அண்மைய மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும்படி ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.
தவறினால் இணைய ஊடுருவிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட அது வழிவகுக்கக்கூடும்; பயனாளரின் கருவிகளை அவர்கள் முழுமையாகக் கட்டுப்படுத்த இயலும் என்பதை அமைப்பு சுட்டியது.

