சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு பெரிய சாலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து படிப்படியாக மூடப்பட்டும். சாங்கி வட்டாரத்தை மேம்படுத்த பெருமளவிலான பணிகள் நடைபெறுவதால் இந்த இரண்டு சாலைகளும் மூடப்
படுகின்றன. லோயாங் அவென்யூவின் ஒரு பகுதியும் பாசிர் ரிஸ் டிரைவ் 1ன் இரண்டு பகுதிகளும் முறையே 2029ஆம் ஆண்டு வரையிலும் 2028ஆம் ஆண்டு வரையிலும் மூடப்படும். இதனால் மொத்தம் 16 பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படும். மூடப்படும் சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று கூறியது.
பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையம், பாசிர் ரிஸ் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையம், 2030ஆம் ஆண்டுக்குள் திறக்கப்பட இருக்கும் குறுக்குத் தீவு ரயில் பாதையில் உள்ள லோயாங் எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகளை முன்னிட்டு இந்த இரண்டு பெரிய சாலைகளும் மூடப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, லோயாங் அவென்யூ வழியாக மேம்பாலச் சாலை ஒன்று கட்டப்படுவதாலும் லோயாங் அவென்யூ, தெலுங் பாக்கு சாலை, நிக்கல் டிரைவ், சாங்கி கோஸ்ட் சாலை, ஏவியேஷன் பார்க் சாலை ஆகியவற்றில் மூன்று கிலோமீட்டர் தூரமுள்ள புதிய சைக்கிள் பாதைகள் அமைக்கப்படுவதாலும் இரண்டு சாலைகளும் மூடப்படுகின்றன.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று பாசர் ரிஸ் டிரைவ் 2க்கும் பாசிர் ரிஸ் டிரைவ் 4க்கும் இடைப்பட்டுள்ள பாசிர் ரிஸ் டிரைவ் 1ன் ஒரு பகுதி முதலில் மூடப்படும்.
பாசிர் ரிஸ் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 2028ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரை அந்தச் சாலைப் பகுதி மூடப்பட்டிருக்கும். அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் பாசிர் ரிஸ் ஸ்திரீட் 11 மற்றும் ஸ்திரீட் 12க்குத் திருப்பிவிடப்படும்.
சாலைகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் ஒன்பது பேருந்துச் சேவைகளின் பயணிகள் அவர்கள் செல்லவிருக்கும் இடங்களை அடைய பாசிர் ரிஸ் ஸ்திரீட் 11 மற்றும் ஸ்திரீட் 12ல் மூன்று ஜோடி பேருந்து நிறுத்தங்களை அமைத்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
பாசிர் ரிஸ் டிரைவ் 1ஐ முழுமையாகத் தவிர்க்க விரும்பும் வாகன ஓட்டுநர்கள், புதிதாக அகலப்படுத்தப்பட்டுள்ள பாசிர் ரிஸ் டிரைவ் 3ஐ பயன்படுத்தலாம். இந்த சாலை பாசிர் ரிஸ் டிரைவ் 1க்கு இணை கோட்டில் உள்ளது.
பாசிர் ரிஸ் டிரைவ் 3க்கும் லோயாங் வேக்கும் இடைப்பட்ட லோயாங் அவென்யூ அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து 2029ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரை லோயாங்
எம்ஆர்டி நிலையம் மற்றும் லோயாங் மேம்பாலச் சாலைக்கான கட்டு
மானப் பணிகளுக்காக மூடப்படும்.
தெம்பனிஸ் விரைவுச்சாலை, சாங்கி வில்லேஜ் ஆகியவற்றை நோக்கிச் செல்லும் ஓட்டுநர்கள் பாசிர் ரிஸ் டிரைவ் 3க்கும் லோயாங் வேக்கும் திருப்பிவிடப்படுவர் என்று ஆணையம் கூறியது. அருகில் உள்ள பூங்கா இணைப்புகளும் மாற்றி அமைக்கப்படும்.

