2 மணி நேரத்துக்கு முடங்கிய உலகளாவிய வாட்ஸ்அப் சேவை
பிரபல தகவல் அனுப்பும், பெறும் தளமான வாட்ஸ்அப் சேவை நேற்று 2 மணி நேரத்துக்கும் மேலாக உலகளாவிய நிலையில் முடங்கியது. இதனால் சிங்கப்பூரில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். வாட்ஸ்அப் முடங்கியதால் தகவல் அனுப்ப பலர் டெலிகிராம் போன்ற மாற்று செயலிகளைப் பயன்படுத்தினர்.
கிட்டத்தட்ட மாலை 5 மணி அளவில் வாட்ஸ்அப் சேவை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியது. வாட்ஸ்அப் சேவை முடக்கம் காரணமாக உலகெங்கும் மில்லியன் கணக்கானோர் பாதிப்படைந்தனர்.
பயனீட்டாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக வாட்ஸ்அப் செயலியின் உரிமையாளரான மேட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
உக்ரேன்-ரஷ்ய எல்லைக்குப் போக வேண்டாம் என வலியுறுத்தல்
உக்ரேன்-ரஷ்ய எல்லைக்குத் தற்போது பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூரர்களிடம் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் தொடர்வதால் அமைச்சு இவ்வாறு நேற்று அறிக்கை வெளியிட்டது.
போர் காரணமாக ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்திருப்பதாகவும் அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாலும் அங்கு செல்வதை ஒத்திவைக்குமாறு கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று செய்த அறிவிப்பை அமைச்சு மீண்டு வெளியிட்டது.
ரஷ்யாவின் கிராஸ்னோடார் பகுதி, பெல்கொரோட், பிரயன்ஸ்க், வொரோனெஸ், குர்ஸ்க், ரோஸ்டோவ் ஆகிய பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சு அறிவுறுத்தியது.
மலேசிய மீனவர்கள் குற்றச்சாட்டு; காவல்துறை மறுப்பு
சிங்கப்பூர் கடலோரக் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மலேசிய மீனவர்கள்.
படம்: இணையம்
சிங்கப்பூர் கடலோரக் காவல்துறையினர் தங்களை மலேசியக் கடற்பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக மலேசிய மீனவர்கள் சிலர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை சிங்கப்பூர் காவல்துறை மறுத்துள்ளது.
மலேசிய மீனவர்களும் சிங்கப்பூர் கடலோரக் காவல்துறையினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மலேசிய மீனவர்கள் லிம் சூ காங்கிற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் இருந்ததாக காவல்துறை கூறியது. இந்தச் சம்பவம் இம்மாதம் 23ஆம் தேதியன்று நடந்தது.

