முன்னணி ஜப்பானிய உற்பத்தியாளரின் ஆதரவுடன் அமைகிறது
முன்னணி ஜப்பானிய முட்டை நிறுவனத்தின் ஆதரவுடன் சிங்கப்பூரின் 'ஐஸ் ஃபுட்ஸ் ஹோல்டிங்ஸ் (ஐஎஃப்எச்) நிறுவனம், உள்ளூரில் நான்காவது முட்டைப் பண்ணையை அமைக்க சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் இருந்து கொள்கை அளவில் அனுமதி பெற்றுள்ளது. அந்த முட்டைப் பண்ணை 2024ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும்.
வரும் 2026ஆம் ஆண்டில் முழுமையாகச் செயல்படும்போது அப்பண்ணை ஆண்டிற்கு 360 மில்லியன் முட்டைகளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும்.
இப்போதைக்குச் சிங்கப்பூரின் முட்டைத் தேவையில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டை உள்ளூர்ப் பண்ணைகள் பூர்த்திசெய்கின்றன. அதனை 50 விழுக்காடாக உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
லிம் சூ காங்கில் 10 ஹெக்டர் பரப்பளவில் புதிய முட்டைப் பண்ணை அமையும். நான்கு பகுதிகளில் அமையும் ஒருங்கிணைந்த வசதியாக அப்பண்ணை திகழும்.
முட்டையிடும் கோழிகளின் பெற்றோருக்காக துவாசிலும் சுங்கை தெங்காவிலும் சிறப்பு வசதிகளும் லிம் சூ காங்கில் 0.6 ஹெக்டர் பரப்பளவில் அடைகாப்பகமும் அமையும். இந்த ஒருங்கிணைந்த பண்ணைக்கான பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும்.
சிங்கப்பூரில் இப்போது செங் சூன் பண்ணை, சியூஸ் அக்ரிகல்ச்சர், என்&என் அக்ரிகல்ச்சர் என மூன்று முட்டைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
உள்ளூர்த் தேவைக்காக உயர்தரமான முட்டைகளை உற்பத்தி செய்வதற்காக ஜப்பானின் முன்னணி முட்டை உற்பத்தியாளராகவும் உலகின் ஆகப் பெரிய முட்டை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்கும் 'ஐஸ் ஃபுட்ஸ் ஜப்பான்' நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஐஎஃப்எச் நிறுவனம் கூறியது.
'ஐஎஃப்எச்' நிறுவனத்தின் 70% பங்கை 'ஐஸ் ஃபுட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவனம் கொண்டிருக்கும் என்று கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மனிதவளத்தையும் எரிசக்தியையும் திறம்படப் பயன்படுத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் நீடித்து நிலைக்கத்தக்க நடைமுறைகளையும் அப்பண்ணை கையாளும்.
இந்த முட்டைப் பண்ணைத் திட்டத்திற்கான மொத்த செலவு $100 மில்லியனைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
"மறுசுழற்சியை மனத்திற்கொண்டு வசதிகளை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பத்தின் துணையுடன் குறைந்த வளங்களைக் கொண்டு அதிகம் உற்பத்தி செய்யவும் ஐஎஃப்எச் நிறுவனம் மேற்கொண்டுவரும் முன்னோடி முயற்சிகள் ஊக்கமளிப்பதாக உள்ளன," என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபு தாம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

