சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜி.பி.செல்வம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜி.பன்னீர்செல்வம் (படம்) கடந்த ஞாயிறன்று காலையில் தமது 86வது வயதில் காலமானார்.
திரு செல்வத்தை மிகச் சிறந்த சட்ட நிபுணர்களில் ஒருவர் என வருணித்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், 'டிரூ அண்ட் நேப்பியர்' சட்ட நிறுவனத்தின் மூத்த பங்காளியாக பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், பின்னர் நீதிபதியாகப் பொறுப்பேற்றார் என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தொடக்க காலத்தில் இளம் வழக்கறிஞராக டிரூ அண்ட் நேப்பியர் சட்ட நிறுவனத்தில் சேர்ந்தபோது, அங்கு வழக்காடுதலில் திரு ஜோ கிரிம்பர்க் (திரு சண்முகத்தின் மதியுரைஞர்), திரு ஹேரி எலாயஸ், திரு ஜி.பி.செல்வம் என மூன்று பெரிய சட்ட நிபுணர்கள் இருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.
முறையான ஆரம்பக் கல்வி இல்லாதபோதும் திரு செல்வம் படிப்படியாக உயர்ந்து, சிங்கப்பூரின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராகவும் பின்னர் நீதிபதியாகவும் மிளிர்ந்தார்.
சட்டம் தொடர்பாக எந்த ஐயம் எழுந்தாலும் அதன் அடிப்படையில் இருந்து உச்சம்வரை மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவராக திரு செல்வம் திகழ்ந்ததாகவும் தமக்கு மதியுரைஞராக இருந்த அவரிடம் இருந்து தாம் பலவற்றைக் கற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
2013ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த லிட்டில் இந்தியா கலவரம் பற்றி விசாரிக்க அப்போதைய துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டியோ சீ ஹியன் அமைத்த நால்வர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவிற்கு திரு செல்வம் தலைவராகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

