காதலியை ஏமாற்றியவருக்குச் சிறை
தன் காதலியையும் அவரின் சகோதரரையும் ஏமாற்றி $181,500 பணம் பறித்த ஆடவருக்கு 32 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜேசன் சின், 47, என்ற அந்த ஆடவர் தன்மீதான 14 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். அவர்மீதான வேறு 26 குற்றச்சாட்டுகளும் தண்டனைக்குமுன் கவனத்தில் கொள்ளப்பட்டன. கடந்த 2005ஆம் ஆண்டு 'ஃபிரண்ட்ஸ்டர்' எனும் சமூக ஊடகம் வழியாக முதன்முதலில் குமாரி போங் சியூ ஃபங்கிற்கு அறிமுகமானார் ஜேசன். பின்னர் அப்பெண்ணின் சகோதரர் போங் குவெட் ஃபாவுடனும் அவர் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். சிங்கப்பூரரான ஜேசன், மலேசியாவில் உள்ள தனது வங்கிக் கணக்கில் 14 மில்லியன் ரிங்கிட் இருப்பதாகக் கூறி, தனது சொற்படி நடந்தால் அவர்கள் இருவருக்கும் $100,000 வழங்குவதாக உறுதியளித்து, பலமுறை பணம் கறந்ததாகக் கூறப்பட்டது.
பயணப்பையில் அரியவகை முதலை
ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்த ஆடவர் ஒருவரின் பயணப்பையில் அரியவகை முதலை இருந்ததை மியூனிக் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஊடுகதிர்ச் சோதனையில் கண்டுபிடித்தனர். கடந்த மாதம் 25ஆம் தேதி இது நடந்தது என்றாலும் இம்மாதம் 13ஆம் தேதியே தகவல் வெளியிடப்பட்டது. அமெரிக்கரான அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டாரா என்ற விவரம் தெரியவில்லை.

