புத்தாக்கம், எரிசக்தி மாற்றம், மின்னிலக்கமயமாதல் ஆகியவற்றிற்கு நிதிச் சந்தைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் (படம்) கூறியிருக்கிறார்.
இந்தத் துறைகள் கூட்டாக, சிங்கப்பூர் தற்போதைய உலகளாவிய நிலையற்றதன்மையைச் சமாளிக்க உதவுவதுடன் வருங்காலச் சவால்களை எதிர்கொள்ளவும் கைகொடுக்கும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற ஆசிய நிதிச் சந்தைகள் கருத்தரங்கில் திரு தர்மனின் சிறப்புரை ஒளிபரப்பப்பட்டது.
பொருளியல் முன்னேற்றத்தின் பலதரப்பட்ட சவால்களுக்குத் தீர்வுகாண்பதில் நிதிக்கு முக்கியப் பங்கு உள்ளது. குறிப்பாக, உயரும் பணவீக்கம், மெதுவடையும் வளர்ச்சி, நாடுகளுக்கு இடையில் அதிகரிக்கும் பதற்றம் என்றிருக்கும் தற்போதைய சூழலில் நிதியின் பங்கு இன்றியமையாதது என்பதை அவர் சுட்டினார்.
"தற்போதைய சூழலில் சிக்கல்கள் வெளிப்படையாக தெரிகின்றன. அவை முன்னெப்போதும் இல்லாத அளவு ஒன்றிணைந்து வந்துள்ளன," என்றார் திரு தர்மன்.
நிகழ்ச்சியில், வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான், சிறப்புரை ஆற்றினார். சிறப்பாகச் செயல்படக்கூடிய திட்டங்களுக்கு மூல நிதியை ஒதுக்குவதன் மூலம் நிதிச் சந்தைகள் புத்தாக்கத்துக்கு உதவுவதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் நிறுவனங்கள் அவற்றின் நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கமயமாதல் ஆகியவை தொடர்பான புத்தாக்க யோசனைகளை நடைமுறைக்குக் கொண்டுவர நிதி தேவைப்படுவதை அவர் சுட்டினார். பொருளியலின் இந்தத் துறைகள்தான் வருங்கால வளர்ச்சிக்கு உதவுபவை என்றார் திரு டான்.
உலக நிதி நடுவம் என்ற முறையில் சிங்கப்பூர் பசுமைப் பொருளியல் முயற்சிகளுக்கு மூலதனம் கிடைப்பதற்கு இடைத்தரகராகச் செயல்படத் தயாராக உள்ளது என்றார் துணையமைச்சர்.
"வர்த்தக உருமாற்றத்திற்கு மின்னிலக்கமயமாதல் வலுவான முறையில் உதவும். நிறுவனங்கள் தானியக்க முறையைப் பின்பற்றி உற்பத்தியைப் பெருக்க இது வழிவகுக்கும்," என்று திரு டான் கூறினார்.
உலகமயமாதலால், கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக வர்த்தகத்தில் பின்பற்றப்பட்ட விதிமுறைகள் இப்போது மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளன என்றார் அவர்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் ஆகியவற்றால் தொழில்நுட்பம், வர்த்தகம், நிதி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்று திரு டான் கூறினார்.
சிங்கப்பூர் தொடர்ந்து அதன் நடுநிலையைப் பாதுகாக்கும் வேளையில் உலக வர்த்தகத்துக்கு உகந்த சூழலை உருவாக்க கடப்பாடு கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
சிறிய நாடுகள் சில தன்னைப் பேணித்தனத்தைப் பின்பற்றினாலும் சிங்கப்பூர் தொடர்ந்து வெளிப்படையாக இருக்கும்; உலகுடன் தொடர்பில் இருக்கும் என்று திரு டான் உறுதியளித்தார்.

