பிரதமர் லீ சியன் லூங், பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு (படம்) வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
புவிசார் அரசியல் பதற்றங்கள், உக்ரேனியப் போர், அதிகரிக்கும் பணவீக்கம் என உலக நாடுகள் பலவும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் சூழலில் திரு சுனக் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தலைமையேற்றிருப்பதைத் திரு லீ தமது கடிதத்தில் சுட்டியுள்ளார்.
திரு சுனக்கிற்குப் பல்வேறு அவசர முன்னுரிமைகள் இருக்கும் வேளையில், சிங்கப்பூரும் பிரிட்டனும் மற்ற நாடுகளுடன் இணைந்து சிக்கலான சவால்களைச் சமாளிக்கவும் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை ஆராய முடியும் என்று பிரதமர் லீ நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
திரு சுனக்கின் பணிச்சுமைகளுக்கு இடையிலும் நீண்டகாலமாய் நீடிக்கும் இருதரப்பு நட்புறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் இணைந்து பணியாற்ற முடியும் என்று தாம் நம்புவதாகப் பிரதமர் லீ தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர், பிரிட்டன் இரண்டுமே விதிமுறைகளின் அடிப்படையிலான பலதரப்பு ஒழுங்குமுறையைத் தீவிரமாக ஆதரிக்கும் நாடுகள் என்று கூறிய திரு லீ, இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான பிணைப்பும் முதலீடு, பாதுகாப்பு, தற்காப்பு, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பும் நிலவுவதை எடுத்துக்கூறினார்.
சென்ற ஆண்டு திரு சுனக் பிரிட்டனின் நிதியமைச்சராக இருந்தபோது கையெழுத்திட்ட நிதிப் பங்காளித்துவத்திற்கு சிங்கப்பூரின் கடப்பாட்டைத் திரு லீ மறுஉறுதிப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கும் அது ஒரு மைல்கல்லாக அமைந்த ஒப்பந்தம் என்று கூறிய திரு லீ, புதிய வர்த்தக வாய்ப்புகளுக்கு அது வழிவிடக்கூடியது என்றார்.
பிரிட்டனில் நிலைத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை நிலைநிறுத்தவும் பிரிட்டிஷ் மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் திரு சுனக்கிற்குத் திரு லீ வாழ்த்து கூறியுள்ளார்.

