தனியார் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் கூடுதல் தொகையை வீட்டுக் கடனை அடைப்பதற்குச் செலவிடுவதாகத் தெரியவந்துள்ளது.
'மூடிஸ்' முதலீட்டாளர் சேவையின் அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, புதிதாக வீட்டுக் கடன் வாங்கிய தனியார் வீட்டு உரிமையாளர்கள் சம்பளத்தில் சராசரியாக 19.4 விழுக்காட்டை வீட்டுக் கடனை அடைக்கச் செலுத்த நேரிட்டது.
சென்ற ஆண்டு டிசம்பரில் இந்த விகிதம் 17.3 விழுக்காடாக இருந்தது.
அடுத்த 12 மாதங்களில் இந்நிலை மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக 'மூடிஸ்' தெரிவித்தது. ஏனெனில் படிப்படியான சம்பள உயர்வு, வட்டி விகித உயர்வையும் சொத்து விலை உயர்வையும் சரிக்கட்டப் போதுமானதாக இருக்காது என்று அது கூறியது.
வீட்டு விலை கட்டுப்படியான தாக இல்லாமற்போனால் அடைமானப் பத்திரங்கள் தொடர்பான சிக்கல்களும் அதிகரிக்கும் என்பதை 'மூடிஸ்' சுட்டியது.
சிங்கப்பூரில் 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட வீட்டு அடைமானக் கடன்கள், மாறக்கூடிய வட்டி விகிதம் கொண்டவை என்பதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி நிதிக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும்போது வீட்டுக் கடன்களும் பாதிக்கப்படும் என்பதை அது எடுத்துரைத்தது.
சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை அடுத்த 12 மாதங்களில் தொடர்ந்து படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக 'மூடிஸ்' கூறியது.
ஏற்றுமதி சார்ந்த பொருளியலைக் கொண்டுள்ள சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடுத்த ஆண்டில் 2.5 விழுக்காடாகக் குறையும் என்று அது முன்னுரைத்துள்ளது.
வளர்ச்சி மெதுவடைந்தாலும் மிதமான அளவில் சம்பள உயர்வு, குடும்ப வருவாய் உயர்வு ஆகியவற்றுக்கு வகைசெய்யும் நிலையில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அமைந்திருக்கும் என்று 'மூடிஸ்' அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

