செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3be47a6f-0125-4c49-a7f6-8acee305c83d
-

நால்வர் கொவிட்-19 கிருமியின் புதிய ஓமிக்ரான் திரிபுகளால் பாதிப்பு

இம்மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் நால்வர் கொவிட்-19 கிருமியின் ஓமிக்ரான் BQ.1, BQ.1.1 திரிபுகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நால்வரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.அவர்களில் யாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்குக் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. பாதிக்கப்பட்டோர் எந்த நாட்டிலிருந்து வந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. நைஜீரியாவில் கடந்த ஜூலை மாதம் முதலில் கண்டறியப்பட்ட இந்த ரகக் கிருமி, தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. புதிய ரகக் கிருமி வேகமாகப் பரவக்கூடியது என்றும் ஆனால் நோயாளியிடம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

கொவிட்-19: புதிய தினசரி பாதிப்புகள் பத்தாயிரத்தைத் தாண்டக்கூடும்

அடுத்து வரும் நாள்களில் புதிதாக கிருமித்தொற்று உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கை 11,000 முதல் 12,000 வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற திங்கட்கிழமை தீபாவளியை முன்னிட்டு பொதுவிடுமுறை என்பதால் பலரும் அன்று மருத்துவரிடம் செல்வதைத் தள்ளிப்போட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை பதிவான புதிய கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 2,994ஆக இருந்தது. வழக்கமாக வாரயிறுதிகளுக்குப் பிறகு பலரும் திங்கட்கிழமைகளில் மருத்துவரிடம் செல்வதால் செவ்வாய்க்கிழமைகளில் புதிதாக கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை அந்த எண்ணிக்கை 11,934. அதற்கு முன்னைய நாள் அது 5,196ஆகப் பதிவானது.

10% தடுப்பூசிகள் காலாவதி

சிங்கப்பூரில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளில் 10 விழுக்காடு காலாவதியாகிவிட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகள் வீணாவது குறித்த ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சு இவ்வாறு கூறியது. மேம்படுத்தப்பட்ட திறன்கொண்ட புதிய தடுப்பூசிகள் வழங்கப்படுவதால் பழைய தடுப்பூசிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படமாட்டா என்று அமைச்சு குறிப்பிட்டது. தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே வாங்கியவற்றைப் புதிய தடுப்பூசிகளுக்குப் பதில் மாற்றிக்கொள்ளவும் தேவையுள்ள மற்ற நாடுகளுக்கு நன்கொடை வழங்கவும் திட்டமிடுவதாகச் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.