வட்டாரத்தில் தூய எரிசக்தி வர்த்தகம் வசதியாக நடைபெறவும் வட்டார இணைப்பை மேம்படுத்தவும் நாடுகள் இணைந்து முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளையும் உள்கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசியாவில் நில, கடல் அடிப்படையிலான இணைப்புகளை உள்ளடக்கிய வட்டார எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் சாத்தியத்தை ஆராய அமெரிக்காவுடன் சிங்கப்பூர் இணைந்து செயல்படும் என்றார் டாக்டர் டான்.
அக்கம்பக்க நாடுகளின் மின்சார அமைப்புமுறைகளை இணைக்கும் அதிக மின்னழுத்தமுடைய கம்பிவடங்களே இந்த மின்சார இணைப்புகள் ஆகும். இவற்றால் சூரியவொளிப் பண்ணைகள் போன்ற இடங்களில் மிச்சப்படும் எரிசக்தி, பகிர்ந்துகொள்ளப்படலாம் அல்லது வாங்கி விற்கப்படலாம். மரினா பே சேண்ட்சில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய தூய எரிசக்தி மாநாட்டில் டாக்டர் டான் இவ்வாறு உரையாற்றினார்.
வட்டார எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதன் பலன்கள், அதன் தொழில்நுட்பச் சாத்தியம், பொருளியல் நம்பகத்தன்மை ஆகிய அம்சங்களை அமெரிக்காவும் சிங்கப்பூரும் இணைந்து மதிப்பிடும் என்றார் டாக்டர் டான்.
ஆய்வின்போது நடப்பில் உள்ள மற்றும் எதிர்காலத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ள மின்சார எரிசக்தி தொடர்புகள் கருத்தில் கொள்ளப்படும். தூய மின்சார வர்த்தகத்தில் வட்டார நாடுகள் வசதியாக ஈடுபடவும் வட்டாரத்தில் மேலும் அதிக முதலீடுகளை ஊக்குவிக்கவும் இன்னும் பிற சாத்திய தொடர்புகளும் ஆராயப்படும்.
மின்சாரத் தேவையைக் குறைக்க புதிய திட்டம்
தேசிய எரிசக்தி விநியோகக் கட்டமைப்பின்கீழ் எரிசக்தி அதிகம் பயன்படுத்தும் வர்த்தக, தொழில்துறை நிறுவனங்கள் தங்களின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவிக்க, புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனை மின்சார விலை அதிகமாக இருக்கும்போது தங்களின் மின்சாரத் தேவையைக் குறைத்துக்கொள்ள நிறுவனங்கள் தாங்களே முன்வருவது, எரிசக்தி உற்பத்தி விநியோகத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் தங்களின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள எந்நேரமும் தயார்நிலை ஆகிய இரண்டில் ஒன்றை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மின்சாரத் தேவை நன்கு நிர்வகிக்கப்படும்போது வர்த்தகங்கள் மற்றும் குடியிருப்புகளின் மின்சாரக் கட்டணம் குறையக் காணலாம்.

